Tuesday, 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 4

இராமநாதபுரம் சமஸ்தானத்தில் அவர்களின் வீரத்திற்கு வேலையைக் கருதி சேதுபதி அடிக்கடி ஏதாவது சோதனைகள் வைப்பார். சோதனை அத்தனையையும் சாதனையாக்கி அவ்விளைஞர்கள் வெற்றிபெற்று சேதுபதியின் அன்புக்குரியவராயினர். அப்படிப்பட்ட சோதனை ஒன்று பற்றிய செவிவழிச் செய்தியாக வருவது. சேதுபதி வெளியூர் புறப்படுகிறார் என்றால் ஒரு வீரர் வேல் பொருத்திய கம்பு முன்னே ஓடிக் கொண்டிருப்பார். இது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. இந்த முறை செந்திலாண்டவனைத் தரிசித்துவர திருச்செந்தூர் புறப்பட்டார் சேதுபதி. ஓட்டக்காரர் பணியை ஆற்றிட சின்னமருது பணிக்கப்பட்டார். பயணத்திற்கு அனைத்தும் தயார். உடல்நலம் குன்றி இருந்ததால் உடன்வர இயலாத இராணியிடம் விடைபெற சேதுபதி அந்தப்புரம் சென்றார். அப்போது இராணி காணிக்கைப் பொருளை எடுத்துக் கொள்ளவில்லையே என்று மன்னரிடம் நினைவாற்றினர். காரணமாகத்தான் விட்டுச் செல்கிறேன். ஆள் வரும,; அப்போது அனுப்பிவிடு எனச் சொல்லி விடைபெற்றார். நெடுந்தூரம் பயணம் மேற்கொண்ட சேதுபதி இளைப்பாறுவதற்காக சாயல்குடி அருகில் உள்ள மண்டபத்தில் இறங்கினார். முன்னே போய்க் கொண்டிருந்த சின்ன மருதுவைக் கூப்பிடச் சொன்னார். வந்தவரிடம் காணிக்கைப் பொருளை அரண்மனையிலேயே மறந்து வைத்துவிட்டேன் என்று சொல்லத் தொடங்கியதும் சின்னமருது அதற்கென்ன, அரசர் செந்திலாண்டவர் சந்நிதி நெருங்குங்கள். காணிக்கைப் பொருளைக் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறேன் எனக் கூறி முகவை நகர் நோக்கி சிட்டெனப் பறந்தார். சேதுபதி திருச்செந்தூர் நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். அதே சமயம் சின்னமருது இராமநாதபுரம்  அரண்மனையை அடைந்து இராணியிடம் காணிக்கைப் பொருளைப் பெற்றுக் கொண்டு திரும்ப ஓட்டத்தைத் தொடர்ந்தார். போகும் வழியில் கடலோரச்சாலை, பனைவிடலிகளும் உடை மரங்களும்தான்! உதிர்ந்து கிடந்த ஒரு உடைமுள் சின்னமருதுவின் பாதத்தில் தைக்கிறது. ஓடுபவர்கள் யாராக இருந்தாலும் முள் தைத்தால் முள்ளை உருவிப் போட்டுவிட்டுத்தான் மேலே நடப்பார்கள். ஆனால் நமது கருமவீரர் சின்னமருது 'என்று அலறவுமில்லை, முள்ளை உருவிப் பிடுங்கவுமில்லை. இடையில் செருகியிருந்த வளரியை எடுத்து தட்டையான பகுதியால் ஒரு ஆசாரி துளையில் சக்கையை அடிப்பது போல ஒரு தட்டுத்தட்டி முள்ளைக் காற்சதைக்குள் அனுப்பினார். கண் இமைக்கும் நேரத்தில் ஓட்டம் தொடர்ந்தது. திருச்செந்தூர் கோபுரம் தெரிகிறது. மன்னர் கோவிலை நெருங்குவதற்கும் சின்னமருது சென்றடைவதற்கும் சரியாக இருந்தது. மன்னருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. மன்னர் பாராட்டியதும் முள் தைத்த வலிகூடப் பஞ்சாய் பறந்து போய்விட்டது. சின்ன மருதுவுக்கு காலில் இரத்தம் கசிவதை மன்னர் கண்டுவிட்டார். என்ன இது? என வினவ நடந்ததை சொன்னார் சின்னமருது. நெஞ்சம் நெகிழ்ந்த மன்னர் இந்த வீரனுக்கும் இவன் உடன்பிறப்புக்கும் உரிய உயரிய பதவி அளிக்க வேண்டும் என தனது அடிமனதில் உறுதி கொண்டார். சேதுபதி மன்னர் மனதில் உறுதிபூண்டதை நிறைவேற்றும் காலம் கனிந்து வந்தது. இவ்விரு வீரர்களுக்கு சிவகங்கைச் சீமை அருகில் உயர் பதவிகள் கிட்டியது எப்படி என்பதை பற்றிப் பார்ப்போம்.
ஒரு நாள் சேதுபதி பழனியப்பரைக் கூப்பிட்டனுப்பினார். ஏதோ இராணுவ சம்பந்தமாக இருக்கும் என்று சென்ற பழனியப்பருக்கு தம் மக்கள் மேன்மையுற இருக்கும் செய்தி தேனாக செவியில் பாய்ந்தது. தளபதியாரே! நேற்று சனவேலிப்பக்கம் வேட்டைக்குச் சென்றிருந்தோம். வேட்டை முடிந்து ஆறுமுகக் கோட்டையில் தங்கியிருந்தோம். கலிய நகருக்கு வந்திருந்த சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் அங்கு நம்மைச் சந்தித்தார். அங்கு அவர் நமது விருந்தினராக வந்திருந்தார். அவரது அமைச்சர் தாண்டவராய பிள்ளைக்கும் தளபதி மாப்பிள்ளை சுப்பிரமணியத் தேவருக்கும் வயதாகிவிட்டது என்றும் அவர்கள் மேலும் தளர்ச்சியிலும், முன்னர் அவர்களுக்குப் பதிலாக வரக்கூடியவர்களை அவர்களிடம் பயிற்றுவிப்பது நல்லது என்று கருதுவதாகவும் அவ்விரு பதவிகளுக்கும் உரிய திறமைசாலிகள் சேதுநாட்டில் இருந்தால் அனுப்பி உதவும்படியும் மன்னர் முத்துவடுகநாதர் எம்மிடம் குறிப்பிட்டார். அப்போதே எனக்கு மருது வீரர்கள் நினைவு வந்துவிட்டது. அவரும் தகுதியும் திறமையும் மிக்க வீரர்களான மருதிருவரை விரும்பிக் கேட்டும் அனுப்புவதாகச் சொல்லிவிட்டேன். சிவகங்கை சீமை அமைச்சர் பலமுறை முகவை வந்தபொழுது இவ்விரு வீரர்களைப் பற்றியும் மன்னர் முத்துவடுகநாதரிடம் ஏற்கனவே பலமுறை சொல்லி உள்ளாராம். எனவே தான் உம் மைந்தர்களை சிவகங்கைச் சீமைக்கு அனுப்பி வை என்றார், சேதுபதி மன்னர்.
நன்றி அரசே எனச் சொல்லும் முன்பே தளபதியாருக்கு நா தழுதழுத்தது. சேதுபதி தொடர்ந்தார் ஒரு நிபந்தனை! திடீரென்று வேற்றுச் சீமையில் இருந்து போகிறவர்களை பெரும் பதவியில் நுழைத்தால் போட்டியும் பொறாமையும் கிளம்பும். எனவே எளிய பதவிகளில் முதலில் நியமிக்கப்படுவர். பதவி எதுவாயிருந்தாலும அரசரின் அருகில் எப்போதும் இருக்கும்டியான வேலையே அவர்களுக்கு பதவி எதுவாயிருந்தாலும் சரி! என் மக்கள் சேதுநாட்டு சூரன் கோட்டையில் பயின்றவர்கள் எனும் புகழை நிலைநாட்டி சேதுபதிக்குப் பெருமை சேர்ப்பார்கள் எம் மக்கள் அரசே என்று உறுதி அளித்தார் தளபதி பழனியப்பர். வேலை எதுவாயினும் சிவகங்கைச் சீமைக்குச் செல்கிறோம் என்றதுமே வீரர் இருவர்க்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சிவகங்கை சீமையில்தானே அவரின் தாய் பொன்னாத்தாள் பிறந்தது. அத்தோடு அவர்களின் பாட்டி வீடு சிவகங்கை சீமையிலுள்ள கொம்புக்காரனேந்தலுக்கு பலமுறை சென்று தங்கிய நினைவுகள் அவர்கள் நெஞ்சில் நிழலாடின. தாய்க்கோ தாங்கொணாத உவகை தந்தைக்குப் பரிவு சற்றே பேதலிக்கச் செய்தது. இந்த நிகழ்வுகளை 24-10-2004 அன்று  மருதுபாண்டியரின் தபால் தலை வெளியீட்டு விழா மதுரையில் தமுக்கம் அரங்கில் நடைபெற்ற பொழுது மருதுபாண்டியர்கள் இன்றைய மாவட்டம் பெயர்களில் குறிப்பிட வேண்டுமானால் விருதுநகரில் பிறந்து, முகவை மாவட்டத்தில் பயின்று சிவகங்கையில் பணியாற்ற வந்த மருதிருவர் நதியில் விளையாடி, கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலாகத்தான் வந்தர்கள். ஆனால் புயல்கள் புறப்பட்டு வருகின்றன என்று அன்று ஆங்கிலேயர் கண்டார்களா? என அன்றைய சட்டசபையின் சபாநாயகர் மாண்புமிகு காளிமுத்து அவர்கள் இச்செய்தியைச் சொன்னார்கள்.

No comments:

Post a Comment