Tuesday, 30 August 2011

திருக்குன்றக்குடி 2

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி


 குன்றக்குடி ஸ்ரீவல்லப கணபதி 
                    அப்போது சிவகங்கைச் சீமையில் மருது பாண்டியர்கள் ஆட்சிக்கு வந்திருந்த சமயம். 1780-ஆம் ஆண்டிற்கும் 1790-க்கும் இடைப்பட்ட காலம்.   
                    இந்த இடத்தில் ஒரு சிறிய விளக்கம்.......
                    விஜயநகரப் பேரரசு காலத்தில் ராயர் அட்மினிஸ்ட்ரேஷன் அந்தப் பேரரசை மண்டங்களாகவும் நாயக்கத் தானங்களாகவும் சீமைகளாகவும் பாளையங்களாகவும் நாடு, ஊர், கிராமம், பட்டி என்றும் வகுத்திருந்தது. 
                    மண்டலத்தை ஆள்பவர் மண்டலேசுவரர். இவர் கவர்னர் மாதிரி. இவருக்கு மேலே ஒருவர். அவர் மஹா மண்டலேசுவரர். அவருக்கும் மேலே ஒருவர். அவர்தான் ராயர். அவருக்கும் மேலே விரூபாக்ஷர் அல்லது திருப்பதி வேங்கடாசலபதி அல்லது ஹஸரா ராமர்.

                    மண்டலேசுவரருக்குக் கீழே நாயக்கர். அப்புறம் பாளையப்பட்டு அது இது..........

                    சிவகங்கைச் சீமை என்பது சேதுபதி மன்னரால் தம்முடைய மகள் அகிலாண்டேஸ்வரி நாச்சியாருக்கு சேதுநாட்டிலிருந்து பிரித்து மஞ்சள் காணியாகக் கொடுக்கப்பட்ட நாடு. நாலுகோட்டை மறவர் குடியைச் சேர்ந்த சசிவர்ணத் தேவரும் அவருடைய வாரிசுகளும் அதை ஆண்டுவந்தனர். அந்தக் குடியில் வந்த மன்னர் முத்துவடுகநாதர் பிரிட்டிஷ்காரர்களுடன் ஏற்பட்ட போரில் இறந்தார். அதன்பின்னர் சிவகங்கைச் சீமை பல குழப்பங்களுக்கு ஆளாகியது. பின்னர் மைசூர்ப் படையின் உதவியுடன் மறவர் படையைத் திரட்டிக்கொண்டு வந்து மருது சகோதரர்கள் சிவகங்கையைப் பிடித்துக்கொண்டனர். பழைய ராணி வேலு நாச்சியாரை மறுமணம்
செய்துகொண்ட பெரியமருது சேர்வைக்காரர் அவருடைய பிரதிநிதியாக - காரியத்துக் - நாட்டை ஆண்டுவந்தார். மருது சேர்வைக்காரர்கள் நாட்டைச் சிறந்த நிலைக்குக் கொண்டுவந்தனர்.
                    பெரிய மருது சேர்வைக்காரருக்கு ஒரு முறை முதுகில் ராஜபிளவை ஏற்பட்டது.

                    மிகவும் கஷ்டப்பட்டார். நாட்கள் அதிகமாக அதிகமாக நோயும் வேதனையும் அதிகரித்தன.
                    பிளவை என்பது Carbuncle எனப்படும் கட்டி. Carbuncle என்பது Abscess எனப்படும் கட்டிவகையிலேயே பெரியது. பல abscess கட்டிகள் ஒன்று சேர்ந்து கார்பங்க்கலாக விளங்கும். Infection-ஆல்தான் இந்த விவகாரங்களெல்லாம் ஏற்படும். அதில் எந்த மாதிரியான வகையறா கிருமி சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து அந்தக் கட்டியின் Virulence எனப்படும் வீரியம் விளங்கும்.

                    ராஜபிளவை என்பது Multiple Carbuncle. கார்பங்க்கலிலேயே சிக்கலானது. Diabetes சம்பந்தம் பெரும்பாலுமிருக்கும்.

                    அவருடைய ஆஸ்தானப்புலவர் சாந்துப்புலவர். மிகவும் சிறு வயசு. முருகனின் திருவருள் பெற்றவர்.

                    அவர் ஒரு யோசனை சொன்னார்.

                    "யாராவது முருகனின் அடியார் ஒருவரைக் கூட்டிவரச் செய்து குன்றக்குடி முருகனை நினைத்து விபூதி போடச் செய்தால் நோய் நீங்கும். நாட்டுக்கோட்டை நகரத்தாருக்கு குன்றக்குடி முருகன் குலதெய்வம். ஆகவே ஆட்களை அனுப்பி வெளியில் முதலில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவந்து பிளவையில் விபூதி போடச் செய்யுங்கள். சரியாகிவிடும்", என்றார்.

                    உடனேயே சேர்வைக்காரர் தம் ஆட்களை அனுப்பி, கண்ணில் தென்படும் முதல் செட்டியாரை அழைத்துவரும்படி சொன்னார்.

                    அவர்கள் சென்ற திக்கில் சிறிது தூரத்திலேயே காடப்ப செட்டியார் என்பவர் வியாபார நிமித்தமாக எதிர்த்தாற்போல வந்துகொண்டிருந்தார்.

                    சேவகர்கள் அவரை அப்படியே உடனேயே அழைத்துக்கொண்டு வந்தனர்.

                    பயந்துபோய் உடன் வந்த செட்டியாரிடம் சேர்வைக்காரர் விபரத்தைச் சொல்லி விபூதி போடச் சொன்னார்
                    அரண்டு போயிருந்த காடப்ப செட்டியார் வழக்கத்துக்கும் அதிகமாக, தேவைக்கும் அதிகமாகக் குன்றக்குடி முருகனை வேண்டிக்கொண்டு பிளவையில் திருநீறு இட்டார்.

                    அவர் அவ்வளவு ஆழமாக முருகனை வேண்டிக்கொள்வதற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருந்தன.

                    அன்று இரவு சேர்வைக்காரர் தூங்கும்போது கனவுபோல ஒரு காட்சி தோன்றியது. கனவா நனவா என்ற இரண்டுமில்லாத நிலை. ஏதோ ஒருவகை அரிதுயில்............. Twilight Sleep-பில் Twilight Zone-னில் சஞ்சாரம்.

                    ஒரு இளம் துறவி கையில் மயில் இறகுடன் வந்து ராஜபிளவையை அமுக்கிவிட்டு, சலத்தையெல்லாம் பிதுக்கியெடுத்து, பிளவையின் வாய்ப்பாட்டில் திருநீறு வைத்து அழுத்திவிட்டு, மயில் இறகால் தடவிக் கொடுத்தது போன்ற காட்சி.
                    காலையில் எழுந்தவுடன் ராஜபிளவை உடைந்திருந்தது; வற்றியும் இருந்தது; வீக்கம் ஏதும் அறவேயில்லை; வலியும் கொஞ்சமும் இல்லை.

                    காடப்ப செட்டியாரை அழைத்து விபரத்தைச் சொல்லி அவருக்கு அவருடைய சொந்த ஊராகிய நேமம் என்னும் நியமத்தில் மானியங்கள்விட்டு, அவரைத் தம்முடைய 'அண்ணன்' என்று கொண்டாடி, அவ்வாறே அழைத்து எப்போதும் தம்முடன் இருக்கச் செய்துகொண்டார்.

                    சாந்துப்புலவரின் ஆலோசனைப்படி குன்றக்குடி கோயிலுக்குத் திருப்பணிகள் செய்ய விருப்பங்கொண்டார்.

No comments:

Post a Comment