கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி
சின்னமருது சேர்வைக்காரர்
பெரியமருது சேர்வைக்காரர்
நித்திய சதா சேவை
சின்னமருது சேர்வைக்காரர்
பெரியமருது சேர்வைக்காரர்
நித்திய சதா சேவை
பல இடங்களில் திருப்பணிகள் பலவற்றை மருது சேர்வைக்காரர்கள் செய்தனர்.
கிழக்கிந்தியக் கும்பினியாரிடம் பெரிய மருது பிடிபட்ட பின்னர் அவரையும் அவருடைய உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரையும் தூக்கிலிட்டனர். திருப்புத்தூர் கோட்டையின் தென்மேற்குக் கொத்தளத்தின் மீது தென்னை மரங்களை வெட்டிப்போட்டு தூக்குமரத்தை நிறுவி அதில் வரிசையாகத் தூக்கிலிட்டனர்.
இதனை Common Gibbet என்பார்கள். தனித்தனியாக தூக்கிலிடுவதில் கௌரவம் இருக்கும் என்றும் ஒரே குறுக்கு மரத்தில் வரிசையாகத் தோரணம் கட்டினாற்போல தூக்கிலிட்டுத் தொங்கவிடுவது அவமானப்படுத்துவது போலாகும் என்ற மரபு அக்காலத்தில் இருந்தது.
இறக்கும் முன்னர் பெரிய மருது சேர்வைக்காரர், தாம் நிறுவிய தர்மங்களும் அறப்பணிகளும் திருப்பணிகளும் மானியங்களும் உரிமைகளும் காக்கப்படவேண்டும்; என்றென்றும் இருக்கவேண்டும் என்று உறுதி வாங்கிக்கொண்டார்.
'முள்ளால் கீறிய கீறலும், சொல்லால் சொன்ன சொல்லும், கல்லால் வெட்டிய கல்லும்' பாதுகாக்கப்படவேண்டும் என்று சொன்னார்.
அதன்படியே பாதுகாக்கப்பட்டன.
அவர்கள் ஆலயங்களில் செய்த திருப்பணிகளில் குறிப்பிடக் கூடியவை சில உண்டு.
சருகணி ஆரோக்கிய மாதா கோயிலுக்கு வெள்ளி ரதம் ஒன்றை அவர்கள் செய்து கொடுத்துள்ளனர். பெரிய மருதுவின் மகள் வழியினர் அந்த தேரின் வடத்தை முதலில் பிடிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர்.
குன்றக்குடி கோயில் திருப்பணியைப் பற்றி கூறினேன்.
இன்னும் நான்கு புராதனமான கோயில்களுக்கும் அவர்கள் சீரமைப்புச் செய்தனர்.
பிரான்மலை, திருக்கோளக்குடி, திருப்புத்தூர், மட்டியூர் ஆகியவை அந்தக் கோயில்கள். இவற்றில் பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, குன்றக்குடி ஆகியவை குடைவரைக் கோயில்களைக் கொண்டவை. பிரான்மலையும் திருப்புத்தூரும் திருக்கோளக்குடியும் தேவார தலங்கள். பிரான்மலையும் குன்றக்குடியும் அருணகிரிநாதரின் திருப்புகழைப் பெற்றவை.
இவற்றை நன்கு பாதுக்காக்கவேண்டும் என்று மருது சேர்வைக்காரர் எண்ணம் கொண்டார்.
திருவண்ணாமலையில் ஓர் ஆதீனம் இருந்தது. அது தெய்வசிகாமணி தேசிகர் என்பவரால் நிறுவப்பட்ட சைவ சித்தாந்த மடம். அதனை 'திருவண்ணாமலை ஆதீனம்' என்றே அழைத்தனர். இருநூற்றைம்பது ஆண்டுகளுக்கும் முன்பாக அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட குழப்ப நிலைமைகளால் அந்த ஆதீனகர்த்தரும் அவருடைய உடன்கூட்டத்தினரும் இடம் பெயர்ந்து பாண்டியநாட்டுக்கு வந்துவிட்டனர்.
திருக்கொடுங்குன்றமாகிய பிரான்மலை ஒரு பாடல் பெற்ற தலமாக இருப்பதாலும் அது மிகவும் பாதுகாப்பான இடமாகத் தோன்றியதாலும் அங்கு ஆதரவு கிடைக்கும் என்பதாலும் அங்கே தம்முடைய மடத்தை அன்றைய திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் நிறுவிக்கொண்டார்.
பாண்டியர்கள், விஜயநகரத்தார் ஆட்சிக் காலங்களில் பாண்டிநாட்டு ஈசான்ய மடாதிபதிகளாகிய கோளகி வம்சத்து லக்ஷ¡த்யாயி சந்தானத்தைச் சேர்ந்த சிவாச்சாரியார்களின் அருளாட்சியில் பிரான்மலை என்னும் திருக்கொடுங்குன்றம் கோயில் விளங்கியது.
மருது சேர்வைகள் தங்களுடைய ஆட்சியின்போது பெரும் பெரும் திருப்பணிகளையும் அறக்கட்டளைகளையும் பாதுகாத்து மேற்பார்வையிட வேண்டும் என்பதற்காக பிரான்மலை, திருப்புத்தூர், திருக்கோளக்குடி, மட்டியூர், குன்றக்குடி ஆகிய கோயில்களை ஒருங்கிணைத்து 'ஐந்து கோயில் தேவஸ்தானம்' என்ற அமைப்பை உருவாக்கினர்.
அந்த அமைப்பின் தலையகத்தை முதலில் பிரான்மலையில் இருக்கச்செய்து அந்த அமைப்பையும் திருவண்ணாமலை ஆதீனகர்த்தரின் பொறுப்பில் மருது சேர்வைக்காரர்கள் விட்டனர். பின்னர் குன்றக்குடியில் அந்த தேவஸ்தானம் நிறுவப்பட்டது.
இன்றளவும் ஐந்து கோயில் தேவஸ்தானம் திருவண்ணாமலை ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து வருகிறது.
திருவண்ணாமலை ஆதீனம் என்பது அதிகாரபூர்வமான பெயர் என்றாலும்கூட அது குன்றக்குடியிலிருப்பதால் 'குன்றக்குடி மடம்' என்றுதான் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை ஆதீனகர்த்தர்களில் மிகவும் புகழ் வாய்ந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் பட்டத்திலிருந்த தெய்வசிகாமணி தேசிகர். அவரை அனைவருமே 'குன்றக்குடி அடிகளார்' என்று அழைத்தனர். அந்தப் பட்டப்பெயர் ஒட்டிக்கொண்டுவிட்டது. பின்னர் அதையும் சுருக்கி 'அடிகளார்' என்று மட்டுமே அழைக்கலாயினர். 'அடிகளார்' என்றால் அவர் திருவண்ணாமலை ஆதீனகர்த்தர் குன்றக்குடி மடாதிபதியாகிய தெய்வசிகாமணி தேசிகர்தான் என்ற நிலைமை அன்று விளங்கியது.
சிலர் பெயராலும் பட்டத்தாலும் சிறப்புப் பெறுவார்கள். சிலர் பட்டத்துக்கும் பெயருக்கும் சிறப்புச் சேர்ப்பார்கள். அவ்வகையில் உள்ளவர்.
பெரியார் என்றால் ஈவேரா; பெரியவர்கள் என்றால் காஞ்சி பரமாச்சாரிய சுவாமிகள் என்று கொள்கிறோம் அல்லவா.
சிறந்த தமிழறிஞர் என்பது மட்டுமல்லாமல் சமூக சிந்தனையாளராகவும் விளங்கினார். அவர் குன்றக்குடியை ஒரு மாடல் சிற்றூராக ஆக்கிக்காட்டியுள்ளார்.
அவருடைய மேற்பார்வையில் குன்றக்குடி பெருமளவுக்கு வளம்பெற்றது.
அதைப் பற்றி தனியாக எழுதவேண்டும்.