Tuesday, 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 14

இராமநாதபுரம் சேதுபதி மற்றும் புதுக்கோட்டைத் தொண்டைமான் தன் பழைய பகை எண்ணங்களை உள்ளத்தில் வைத்துக் கொண்டு மருதுபாண்டியர்களுக்கு எதிராக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்தார்.  ஆங்கிலேயருக்கும் கம்பெனியாருக்கும் வரி கொடுக்க மறுத்த பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் மீது படையெடுத்தார்கள். 5-9-1799ஆம் நாளில் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது. தப்பி ஓடிய கட்டபொம்மன் புதுக்கோட்டைக் காடுகளில் புதுக்கோட்டை மன்னரால் நயவஞ்சகமாக பிடிபட்டார். 16-10-1799ஆம் நாளில் கயத்தாறு என்ற இடத்தில் தூக்கிலிடப்பட்டார்.
ஊமைத்துரை ஆங்கிலேயர்களால் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஒரு நாள் அதாவது 2-2-1801ஆம் தேதி பாளைங்கோட்டை சிறையை உடைத்துக் கொண்டு தன் ஆதரவாளர்களுடன் வெளியேறினார். (இச்செயலுக்கு சின்னப் பாண்டியர் படை உதவி செய்ததாககச் சொல்கிறார்கள்) அதன் பின்பு ஊமைத்துரை நேரடியாக சிவகங்கைக்குள் 22-5-1801ல் அடைக்கலம் புகுந்தார். சின்னப்பாண்டியர் மேளதாளங்களுடன் தீவட்டி, தீபஜோதி ஆராதனைகளுடன் வரவேற்று மரியாதை செய்து சிறுவயலுக்கு அழைத்துச் சென்றார்.
இந்த நிகழ்ச்சியைத்தான் சிவகங்கைச் சீமையின் கிராமப் பகுதிகளில் 'சிவகங்கைக்கு வினை கொட்டு மேளத்துடன் வந்ததுஎன்று ஊமைத்துரை சிவகங்கைக்கு வந்தது முதல் வினைகள் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கின. ஊமைத்துரைக்கு அடைக்கலம் கொடுத்ததற்காகச் சின்னமருது மேல் எஸ்.ஆர். லூஷிங்டன் என்ற கலெக்டர் ஆத்திரமும் கோபமும் கொண்டார். கர்னல் அக்னியூ ஒரு தந்திரமான அறிக்கையை 12-6-1801ஆம் தேதி பிரகடனப்படுத்தினார். அதில் 'சின்ன மருதுவுடனோ அல்லது அவர் தம் கூட்டாளிகளுடனோ எவரேனும் தொடர்பு வைத்துக் கொண்டாலோ கம்பெனியின் முகாம்களைத் தகர்த்தாலோ அவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவார்கள். கம்பெனியின் அனுமதியில்லாமல் யாரும் துப்பாக்கி வெடிமருந்து முதலியவற்றைப் பகிரங்கமாகவோ, இரகசியமாகவோ எடுத்துச் செல்லக்கூடாது. சிவகங்கையின் அரசுரிமைப் பட்டத்திற்குப் போட்டியிடுவோர் எவராயினும், சின்ன மருது மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்களது கோரிக்கை தடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.”
இந்த அறிக்கைக்குப் பதிலாகத் தான் சின்னப் பாண்டியரின் 'ஜம்பூ தீவப் பிரகடனம்த்தை திருச்சியில் நவாப் முகமது அலியின் திருச்சிக் கோட்டையில் நவாப்பின் மாளிகைக்குச் செல்லும் மிகப்பெரிய வாயிற்கதவிலும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் கோயிலின் சுவரிலும் தென்னிந்திய தீபகற்பத்தில் வாழும் மக்களுக்காக ஒரு பிரகடனத்தை தீட்டினார். இந்தப் பிரகடனம் தான் முழு இந்தியாவிற்கே முதல் முதலில் ஆங்கிலேயரை எதிர்த்து எடுக்கப்பட்ட விடுதலைப் பிரகடனமாகும். இதற்கு முன்பு பல ஆங்கிலேயரை எதிர்த்தாலும் கூட்டு முயற்சியில் ஆங்கிலேயரை எதிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியது இதில்தானாம்!

No comments:

Post a Comment