Tuesday, 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 20

மருது சகோதரர்களின் ஆக்க நிலையான அரசியல் நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க, மற்றொன்று கூட்டமைப்புகளை அவர்கள் பல்வேறு கூட்டமைப்புகளை கூட்டிணைவுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகும். கட்டபொம்மன் தலைமையிலான திருநெல்வேலி கூட்டிணைவு விருப்பாச்சிப்பாளைய மன்னர் கோபால நாயக்கர் தலைமையிலான திண்டுக்கல் கூட்டிணைவு, கேரள வர்மன் தலைமையில் அமைந்த மலபார்க் கூட்டிணைவு, துந்தாஜிவாத் தலைமையிலமைந்த மராட்டியக் கூட்டிணைவு, கானிஜகான் தலைமையிலமைந்த கோயம்புத்தூர் கூட்டிணைவு ஆகிய அனைத்தையும் ஒன்றாக இணைத்தனர். ஆங்கில ஆட்சிக்கு எதிராக ஒருமுகப்படுத்தினர். ஆனால் துரதிஷ்டமான இக்கூட்டிணைவுகள் ஒருங்கிணைந்து செயலாற்றத் தொடங்கும் முன்னரே சில நசுக்கப்பட்டன. சில ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் கலைக்கப்பட்டன. இருப்பினும் மருது சகோதரர்கள் தங்களின் நோக்கத்திலிருந்து சிறிதும் மனம் தளரவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்து அவர்களுக்குள்ள நாட்டுப் பற்றை வெளிப்படுத்தினர். ஆங்கிலேய மேலாண்மை எதிர்ப்புப் போர் அவர்களின் துணிவு, அரசியல் செயல்திறம் ஆகியவற்றிற்குச் சான்று பகர்வனவாகத் திகழ்கின்றன.
கர்னல் ஜேம்ஸ் வேல்ஸ் தமது நினைவுகளில் ஓரிடத்தில் மருது சகோதரர்களின் வீழ்ச்சியைப் பற்றி தம் சொந்தக் கருத்தைக் கூறுகிறார். சில மாதங்களுக்கு முன் இதே வழியாகச் சென்று சிறுவயலில் வெ ள்ளை மருதுவின் அரண்மனையில் விருந்தாளியாக இருந்துவிட்டு அதே பிரதேசத்தில் அவரது எதிரியாக மீண்டும் வருவேன் என்பதை நான் சிறிதளவுகூட அறியாததேயாகும். பாஞ்சாலங்குறிச்சி வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தியுள்ளனர். ஆனால் எனக்குத் தெரிந்த அளவில் மருதுவிற்கு தீர்த்து வைக்க முடியாதபடி எந்தக் குறையுமில்லை. அவர் செய்யும் இந்த கலவரம் தேவையில்லாததாகும். மருதுவை மதிக்கும் அளவிற்கு ஊமத்துரையை நான் மதிக்க முடியாது என இதிலிருந்து நாம் அறிவது மருதுவிற்கு ஐரோப்பிய நண்பர்கள் இருந்தனர் என்பது உண்மைதான்.
ஆனால் அதன் காரணமாகவே அவர்கள் ஆங்கிலேயரின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டனர் எனக் கருத இயலாது.தமது பாளையத்தில் மட்டுமின்றித் தமிழகத்திலிருந்தே இன்னும் ஆழமாகக் குறிப்பிட வேண்டுமனால் இந்தியாவிலிருந்தே ஆங்கில மேலாண்மையை முற்றிலும் அகற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில்தான் அவர்களில் ஒவ்வொரு செயற்பாடும் இருந்தது. மருதுவின் திருச்சி அறிக்கை உன்னிப்பாக கவனித்தால் அதன் உண்மை தெ ள்ளத்தெளிவாக நமக்குப் புரியும். திப்புசுல்தான் மறைவுக்குப் பிறகு சின்னப் பாண்டியரி;ன் விடுதலை வேட்கை கொழுந்துவிட்டு எறிந்தது. ஆங்கில மேலாண்மையை அடியோடு அகற்ற வேண்டுவதன் இன்றியமையாமையை அவ்வறிக்கையில் தெளிவாகச் சுட்டியிருந்தனர். எனவே ஜேம்ஸ் வேல்ஷ் குறிப்பிடுவதைப் போல் மருது சகோதரர்களுக்கு எவ்விதக் குறையும் இருந்ததில்லை என்பது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் வேண்டுமாயின் ஒரு வேளை பொருந்தலாம். ஆனால் பொது வாழ்க்கையில் - குறிப்பாக அரசியல் வாழ்க்கையில் பொருந்தாது.
ஆங்கிலேயரின் தயவில் மருது சகேதாரர்களின் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்வதற்கு அவர்களுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தன. ஆயினும் அவர்கள் எந்தச் சூழலிலும் தம் சொந்த நலனுக்காக ஆங்கிலேயரை நாடவில்லை. விடுதலை வேட்கையின் பொருட்டே ஆங்கிலேயரை எதிர்த்தனர். எனவே தான் மருது சகோதரர்கள் ஆங்கிலேயரைத் தங்கள் சொந்த எதிரியாகக் கருதாமல் இந்த நாட்டின் எதிரியாகக் கருதினர். அன்னாளில் இத்தகைய அரசயில் நோக்கும் இலட்சியமும் பாளையத் தலைவர்களில் சிலரிடையே மட்டுமே இருந்தன. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் முன்னிற்பவர்கள் மருது சகோதரர்கள் என்பது வரலாறு காட்டும் உண்மை.
ஆங்கிலேயருக்கு எதிரான மருது சகோதரர்களின் கிளர்ச்சி அரசயில் சார்புடையோர் மட்டும் நடத்திய கிளர்ச்சியன்று, அது மக்கள் கிளர்ச்சியுமாகும். ஆங்கிலேயரின் ஆட்சியலும் ஆற்காட்டு நவாப்பின் நடவடிக்கையிலும் மக்கள் வெறுப்படைந்தனர் தடுக்கின்றர் என்பதை அறிந்து மருது சகோதரர்கள் அவர்களை ஒன்று திரட்டி ஆங்கிலேயரை எதிர்க்கும் மாபெரும் மக்கள் ஆற்றலை உருவாக்கினர். அவர்கள் நடத்திய கிளர்ச்சியில் அனைத்துச் சாதியினரும், அனைத்துத் தொழில்புரிவோரும் கலந்து கொண்டனர். அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர், இஸ்லாமியர் ஆகிய அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் ஐரோப்பிய மேலாண்மையினின்றும் மீட்க வேண்டும் என்றும சின்ன மருது தம் திருச்சி அறிக்கையில் அறிவித்திருந்தார். அதற்கேற்ப மறவர், நாடார், தோட்டியர், கள்ளர், மீனவர் எனப் பல சாதியினர் இக்கிளர்ச்சியில் பங்கேற்றனர். மன்னர்களும், குறுநிலத் தலைவர்களும் ஆட்சிபுரிந்த அக்காலத்தில் இத்தகைய வலுவான மக்கள் முன்னணியை மக்கள் ஆற்றலைத் திரட்டிய மருது சகோதரர்களின் மக்களாட்சி பண்பு சிறப்புக்குரியதாகும்.கிளர்ச்சியுடன் நடந்த போதிலும் அம்முயற்சி தோல்வியடைந்தது.
அதற்குப் பல காரணங்களைக் கூறலாம். 1) புதுக்கோட்டை அரசர் விஜயரகுநாதராயத் தொண்டைமானும் தஞ்சாவூர் மன்னரும் ஆங்கிலேயரை அதிகப்படியாக ஆதரித்துப் படையுதவியுள்பட அனைத்து உதவிகளையும் செய்தது. 2) விடுதலைப் போராட்ட வீரர்களிடம் திட்டமிட்ட போர்ப் பயிற்சி இல்லாதது புதிய ரக ஆயுதங்களை கையாளுதுவில் உள்ள தொய்வு. 3) எதிரியின் ஆற்றலை முறியடிக்கத் தகுந்த திட்டத்தைக் கூட்டணியில் வகுக்காதது. 4) அனைத்து கூட்டிணைவுகளும் அந்தந்த இடத்தில் ஒரே காலத்தில் கிளர்ச்சியைச் செய்யாதது. இக்காரணங்களால் ஆங்கிலேயர் கிளர்ச்சிகளை ஒவ்வோரிடமாக நசுக்கினர். இதனால் சிவகங்கைப் பாளையத்திலும் கிளர்ச்சி தோல்வியுற்றது.மருது பாண்டியர்கள் மீது ஆங்கிலேயர்கள் படையெடுத்ததற்குப் பொருத்தமான காரணங்கள் எவையுமில்லை. ஆயினும் அவர்கள் சொல்லும் இரு காரணங்களுக்காகப் போர் தொடுத்தனர். 1) கட்டபொம்மு மறைந்த பிறகு குமாரசாமி எனற ஊமைத்துரைக்கு சிவகங்கைப் பாளையத்தில் அடைக்கலம் கொடுத்தது. 2) சிவகங்கையின் உண்மையான குடிவழியை நிலைநிறுத்த விரும்பியது.
மருது சகோதரர்கள் ஊமைத்துரைக்கு அடைக்கலம் தந்தது தவறு என்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு உரிமையுடையவர் ஆற்காட்டு நவாபுமேயன்றி ஆங்கிலேயர் அல்லர். கி.பி. 1792இல் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆங்கிலேயர் பாளையக்காரரிடம் மேலாண்மை செலுத்தும் உரிமையைப் பெற்றிருந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தம் ஆற்காட்டு நவாபுக்கும் ஆங்கிலேயரின் மேலாண்மையை நிலைநிறுத்தும் பொருட்டும் அவர்களுக்குள் செய்து கொண்ட தன்னல ஒப்பந்தமேயாகும். பாளையக்காரர்களின் நலன்களை முன்னிறுத்து செய்துகொண்ட ஒப்பந்தமன்று. எனவே அது எவ்வகையிலும் எந்தப் பாளையக்காரரையும் கட்டுப்படுத்தும் தகுதி பெற்றதன்று. இந்த ஒப்பந்தத்தில் ஆற்காட்டாருக்கே பின்பு உடன்பாடு இல்லாமல் போய்விட்டது. ஆயினும் ஆற்காட்டு நவாபுடன் ஆங்கிலேயர் செய்து கொண்ட ஒப்பந்தத்தை முன்னிறுத்திப் பாளையக்காரர்களை அடக்க முயன்றனர். மருது சகோதரர்களிடமும் இவ்வடக்கு முறையைத்தான் ஆங்கிலேயர்கள் கையாண்டனர்.
ஊமைத்துரைக்கு அடைக்கலம் அளித்ததோ சிவகங்கைப் பாளையத்ததுக்குரிய நேர்குடி வழியினரை மன்னராக அமர்த்ததோ மருது சகோதரர்கள் செய்த குற்றமாயின் அவை தொடர்பாக முறையான விசாரணையை ஆற்காட்டு நவாபுவின் ஒப்புதலில் நடைபெற்றிருக்க வேண்டும. காரணம் முத்துவடுகநாதர் 26-6-1772இல் இறந்த பிறகு வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் கழித்து சிவகங்கையை மீட்ட பொழுது மருதுபாண்டியர்கள் அரும்பாடுபட்டு 40,000 பக்கோடே பணத்தைக் கொடுத்து மீட்ட பொழுது இந்த கேள்விகளை எல்லாம் ஆற்காட்டாரும், ஆங்கிலேயரும் ஏன் கௌரி வல்லபரும் கேட்டிருக்க வேண்டும். அப்பொழுது எல்லாம் குடிவழியைக் கேட்காமல் இப்பொழுது கேட்பது மிகவும் வேதனையான நிகழ்வு. மருது சகோதரர்களை கைது செய்த நிலையில் கூட அவர்களை எத்தகைய விசாரணைக்கும் உட்படுத்தவில்லை. விசாரணை நடத்தினால் சட்டப்படி குற்றம் சுமத்த இயலாது என்பதே இதற்குக் காரணம். ஆற்காட்டு நவாபும் புதுக்கோட்டை தொண்டைமானும் மருது சகோதரர்களை அடக்க வேண்டும் என்று ஆங்கிலேயரை வற்புறுத்தியதும், திருநெல்வேலி ஆட்சித் தலைவர் லூசிங்டன் மருது சகோதரர்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டதுமாகிய இரு அடிப்படைக் காரணங்களினாலேயே ஆங்கிலக் கம்பெனியார் போர் தொடுத்தனர்.
ஆற்காட்டு நவாபு சிவகங்கையின் வலிமையைக் குறைப்பதற்கு பலமுறை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்முயற்சியில் தோல்வியடைந்தார். இதனால் காழ்ப்புணர்வு மேலிட்டு 1786லும் 1788லும் கம்பெனியாருக்கு இரு கடிதங்களை எழுதினர். சிவகங்கையின் மீது படையெடுக்க வேண்டுவதன் முக்கியத்தை அதில் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறே புதுக்கோட்டைத் தொண்டைமானும் எல்லைத் தகராறு என்பதைக் காரணம் காட்டி 1788லும் 1792லும் இருமுறை சிவகங்கைப் பாளையத்தின் மீது படையெடுத்தார். மருது சகோதரர்களுக்கு சிவகங்கைச் சீமையில் உள்ள மக்கள் செல்வாக்கினால் அவரின் முயற்சி தோல்வியுற்றது. இதனால் அவர் மீது வெறுப்பை வளர்த்திருந்தார். எனவே மருது சகோதரர்கள் மீது ஆங்கிலேயர் படையெடுத்தது. சிலரது தூண்டுதலினாலும் விருப்பு வெறுப்புகளை நிறைவு செய்யும் பொருட்டே ஆகும். இவையன்றி வேறு ஒரு பொருத்தமான நோக்கம் எதுவுமில்லை. மருது சகோதரர்களின் அரசியல் வளர்ச்சியையும், எழுச்சியையும் கண்டு ஆங்கிலேயர் அச்சமும் பொறாமையும் கொண்டனர். அவர்கள் மருது சகோதரர்களின் குடும்பத்தினருக்கு அளித்த தண்டனையில் அவற்றைத் தணித்துக் கொண்டனர். சின்ன மருதுவின் 15 வயதே நிரமபிய அவரின் மகன் துரைசாமி என்பவர் நீங்கலாக ஆண்கள் அனைவரையும் எந்த இடத்தில் பிடிபடுகிறார்களோ அதே இடத்தில் தூக்கிலிட்டனர். தாய் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய மாவீரர்களின் குடும்பத்தில் ஆண்கள் யாருமே மிஞ்சக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்ட ஆங்கிலேயரின் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத கறையுடையதாகும். காரணங்களை ஆராயாமல், கிளர்ச்சி செய்தவர்களையே விசாரணை இன்றி தூக்கிலிட்டது நாகரிகமற்ற செயலாகும்.
மருது சகோதரர்கள் விடுதலைப் போரில் தோல்வி அடைந்தனர். உண்மைதான் அவர்கள் அப்போரில் வெற்றி பெற்றிருந்தால் நாளடைவில் எல்லோரையும் போல் அவர்களின் பெயர் இப்பொழுது உள்ள சந்ததியினருக்கு தெரியாமல் அல்லவா போய் இருக்கும். போரில் தோல்வி அடைந்தாலும் அவர்களின் வீரம் செறிந்த இலட்சியமும், குறிக்கோளும் தோல்வியடையவில்லை. அவர்கள் தூக்கிலிடப்பட்டதன் பின்னர் 146 ஆண்டுகள் கழித்தே விடுதலை இலட்சியம் நிறைவேறியது. நாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றது. இத்தனை ஆண்டுகள் கழித்து அடைந்த விடுதலையை அக்காலத்திலேயே எண்ணினர். எழுச்சியுடன் செயல்பட்டனர். அவர்களின் இன்னுயிர் ஈந்தனர். நாட்டுமக்கள் இவ்வாறு எண்ணிப் பார்க்கும் அளவிற்கு அவர்களின் வாழ்க்கை அமைந்ததுதான் அவர்களுக்குரிய வரலாற்றுச் சிறப்பு.
மருது சகோதரர்களைப் பற்றி வரலாற்று உரியவைகள் திட்டமிட்டு அனைத்தையும் அழித்தாலும் அவர்கள் அறிவித்த திருச்சி அறிக்கை ஒன்று மட்டும் அவர்களின் இலட்சியத்தை விளக்கப் போதுமானதாக அமைந்துள்ளது. ஆங்கிலேயர்கள் சில நிகழ்வுகளை பாதுகாத்து வைத்ததினால் ஓர் அளவாயினும் மருது சகோதரர்களின் வீரத்தை எந்தவித சுய விளம்பரம் இன்றி உண்மையை உரைப்பனவாக உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் எதிரிகளாய் விளங்கிய ஐதர் அலி அவர் மகன் திப்புசுல்தான் ஆகியோர்கூட இத்தயை அறிக்கையை வெளியிடவில்லை. உண்மையில் 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எந்தப் பாளையக்காரரும்(கட்டபொம்மு உள்பட) ஏன்? எந்த இந்திய மன்னரும் இத்தகைய அறிக்கையை துணிச்சலுடன் வெளியிடவில்லை.
இதன் மூலம் தனக்கும், தனது குடிகளுக்கும் பல இன்னல்கள் வரும் என்றும் சின்னப் பாண்டியர் செய்தார் என்றால் என்ன சொல்ல. குறிப்பிடத்தக்க இந்திய வரலாறு ஆவணங்களுள் ஒன்றாக இவ்வறிக்கையைக் கொள்வது பொருத்தமுடையதாகும். ஆங்கில மேலாண்மைக்கு எதிராக இந்திய மண்ணில் எழுந்த எழுத்து வடிவிலான முதல் அறிக்கை இதுவே என்பது வரலாற்றில் நிலை நிறுத்தப்பெறும். இத்தகைய புகழ்மிக்க ஆவணத்தை நிலைநிறுத்தி தங்கள் இன்னுயிரையும் குடும்பத்தினரின் இன்னுயிரையும் பலி பீடத்தில் ஏற்றிக் கொண்ட மருது சகோதரர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நின்று நீங்கா இடம் பெறும்.
'
வாழ்க மருதுபாண்டியர்களின் புகழ்
'
ஓங்குக அவர்களின் புகழ்
முற்றும்

1 comment:

  1. வணக்கம்
    தீரர் சின்ன மருதுவின் மகன் துரைசாமி அனாதையாக சுமாத்திரா தீவில் அமரரானார் என்பது சரிதம். அவர் சிவகங்கையில் இறக்கவில்லை. காண்க
    http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?page=1

    ReplyDelete