கோயில் என்று தமிழில் வெறுமே சொன்னால் அது தில்லையையும், திருவரங்கத்தையும் தான் குறிக்கும். அவற்றை விடுத்து, சிவகங்கைக்கு அருகில் உள்ள காளையார் கோயிலைத் தான், வரலாற்றுத் தாக்கம் ஏற்படுத்தியதாய் நான் சொல்லுவேன். (எங்கள் பக்கத்துக் கோயில் என்பதற்காக அப்படிச் சொல்லவில்லை.)
காளையார் கோயில் என்பது, இன்று கோயிலுக்கும் ஊருக்குமான பெயர். சங்க காலத்தில், கானப் பேரெயில் என்று தான் ஊருக்குப் பெயர் இருந்தது. (கானத்தில் இருக்கும் பெரிய கோட்டை கானப் பேர் எயில்.)
சோழ நாட்டில் இருந்து, ஈழம் செல்ல ஒரு பக்கம் ஆதி சேது என்னும் கோடியக் கரை; இன்னொரு பக்கம் மதுரை வழியாய் இராமேச்சுரம். இரண்டாவது வழியில், கடலாழம் அன்றைக்கு மிகவும் குறைவு; கிட்டத்தட்ட ஓராள், இரண்டாள் உயரம் தான் பல இடங்களில் இருக்கும்; வெகு எளிதில் ஈழம் போய்விடலாம். மதுரையில் இருந்து இராமேச்சுரம் போக, காளையார் கோவில் கானத்தைக் கடக்க வேண்டும்.
கானப்பேரை ஆண்டுவந்த கோதைமார்பனை வீழ்த்தி கானப் பேரெயிலைப் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடந்ததாக சங்க இலக்கியம் பேசும். (அப்படிக் கடந்து, குறுநில மன்னனை தோற்கடித்தால் தானே நெல்லையும், நாஞ்சிலும், குமரியும் பாண்டியனின் கட்டுக்குள் தொடர்ந்து இருக்கும்?) இன்றைக்கு நாம் காணும் சங்க இலக்கியங்களைத் தொகுத்தது, இந்தப் பாண்டியனின் பேரவையில் தான்.
கானப்பேரெயிலைச் சுற்றி இருக்கும் காட்டின் அடர்த்தி தமிழக வரலாற்றில் பெரிதும் பேசப்பட்டிருக்கிறது. பேரரசுச் சோழர் (imperial chozas) காலத்தில், இந்தக் காடு இன்றையைக் காட்டிலும் பரந்து பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் வரை இருந்திருக்க வேண்டும். (அதே போல திண்டுக்கல், அழகர்கோயில் வரை இன்னொரு காடு தொட்டுக் கொண்டிருக்கும்.) கானத்தின் வடகிழக்கு எல்லையாய் கான் நாடு காத்தான் என்னும் பெயர் கொண்ட எங்கள் பக்கத்து ஊர் தென்படுகிறது. "இராசராசனும், இராசேந்திரனும், இன்ன பலரும், தங்களின் பெரும்படையை கானபேரெயிலின் வழியே நகர்த்தி ஈழம் போயிருக்க வேண்டும்" என்று ஆய்வாளர் ஊகிக்கிறார்கள். இலங்கையில் இருந்து படையெடுத்து வந்த இலங்காபுரத் தண்டநாதன் கூட, எதிர்வரவாய், மதுரை நோக்கிக் காளையார்கோயில் வழி படையெடுத்துப் போயிருக்கிறான். [சிங்களத்தாருக்கும், நமக்கும் இடையுற்ற உறவாடல்கள், சண்டைகள், பெண் கொடுப்பு, பண்பாட்டுப் பரிமாறல்கள் போன்றவற்றை நம் வரலாறுகள் சொல்லித் தருவதில்லை. வடபுலத்தாரைக் காட்டிலும் சிங்களத்தாரும், கன்னடத்தாரும் நமக்கு முகன்மையானவர்கள் என்பதே வரலாற்று உண்மை.]
காளையார் கோயிலின் மூலவரைக் காளீசர் என்றும், அம்மனைச் சொன்னவல்லி (சொர்ணவல்லி) என்றும் அழைக்கிறார்கள். காளியப்பன், சொர்ணவல்லி என்ற பெயர்கள் சிவகங்கை வட்டாரத்தில் மிகுதியும் உண்டு. கோயிலின் உள்ளே, அருகருகே, மூன்று கருவறைகள் உண்டு. காளீசருக்கு ஒருபக்கம் சோமேசரும், இன்னொரு பக்கம் மதுரையை நினைவுறுத்துமாப் போல சுந்தரேசரும், இருக்கிறார்கள். இவர்களுக்கு நாயகியாய்ச் சுந்தர நாயகியும், அங்கயற்கண்ணியும், உண்டு. ஆக மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரு பெருங்கோயிலாய் மாறியிருக்கிறது. சம்பந்தர், சுந்தரரும், அருணகிரிநாதரும் இங்கு பாடியிருக்கிறார்கள். பதினோறாம் திருமுறையும் பாடுகிறது. திருவருட்பாவிலும் சொல்லப் பட்டிருக்கிறது. சிற்பக் கலை சிறந்து விளங்கும் இந்தக் கோயில் பெருமாண்டமானது. பலரும் பார்க்க வேண்டிய கோயில். [அண்மையில் வலைப்பதிவில் திரு. இராமநாதன் இந்தக் கோயில் பார்த்ததை ஒளிப்படங்களோடு பதிவு செய்திருந்தார்.] வரகுண பாண்டியன் (1251-1261) காளீசருக்குத் திருப்பணி செய்து ஒரு சிறு கோபுரத்தை இங்கு எழுப்பியிருக்கிறான்.
பாண்டியருக்குப் பின்னால், நாயக்கர் ஆட்சியும், நவாபு ஆட்சியும் வந்து, முடிவில் சிவகங்கைச் சீமை முழுதும், 1604 ல் சேதுபதிகளுக்குக் கீழ் வந்து சேர்ந்திருக்கிறது. சேதுபதிகள் மதுரை நாயக்கர்களுக்கும், பின்னால் ஆற்காடு நவாபுக்களுக்கும் கீழ், தொட்டும் தொடாமலும், அவ்வப்போது கப்பம் கட்டி, அடங்கி இருந்திருக்கிறார்கள். கிழவன் சேதுபதி (1674-1710)க்கு அப்புறம் வந்த அவர் மகன் விசயரகுநாத சேதுபதி, தன் மகள் அகிலாண்டேசுவரியை நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரின் மகனான சசிவர்ணத் தேவருக்கு மணம் முடித்ததில் இருந்து, சிவகங்கைச் சீமை ஒரு தனித்த நிலை பெறுகிறது. திருமணத்திற்குப் பின்னால், சேதுநாட்டில் இருந்து மூன்றில் ஒருபங்கு பிரித்துச் சிவகங்கைச் சீமையில் சேர்க்கப் பட்டது. சேதுநாட்டிற்கும் சிவகங்கைச் சீமைக்கும் எப்பொழுதும் வெதுப்பும், கனிவுமாய் அடுத்தடுத்து உண்டு. கொள்வினை - கொடுப்பிணை இருக்கும் சீமைகள் அல்லவா?
சசிவர்ணரின் மைந்தர் முத்துவடுக நாதருக்கு (இவர் பூதக்க நாச்சியார் என்ற இன்னொரு அரசிக்குப் பிறந்தவர்; சேதுபதியின் மகள் அகிலாண்டேசுவரிக்கு பிள்ளைகள் கிடையாது). மெய்க்காப்பாளராய் வந்து சேர்ந்தவர்கள் மருதிருவர். [இவர்கள் பிறந்த ஊர் அருப்புக் கோட்டைப் பக்கம். இவர்களின் தாயாரின் ஊர் சிவகங்கைப் பக்கம்.] முத்துவடுகரை ஆங்கிலேயரும், ஆற்காடு நவாபும் சூழ்ச்சி செய்து தொலைத்த பின்னால், அவர் மனைவி வேலுநாச்சியார் ஆட்சிக்கு வந்தார். முத்து வடுகர் ஆட்சியிலும், வேலுநாச்சியார் ஆட்சியிலும் மருதிருவர் பெரும்பொறுப்பு வகித்தார்கள். பெரிய மருது தலைமை அமைச்சராயும், சின்ன மருது தளபதியாயும் சேவை செய்தார்கள். முடிவில், தாயாதிச் சண்டையில் இருந்து மீள்வதற்கு இடையில், வேலுநாச்சியார் பெரிய மருது சேர்வையையே மணஞ் செய்தார். அதற்குப் பின் நடந்த எல்லாப் புரிசையிலும் (practice) பெரிய மருது மன்னராகவே கருதப் பட்டார்.
மேலும் இங்கு நுணுகி விவரிக்காமல், மருதிருவர் காலத்தில் காளையார் கோயிலுக்கும் தமிழக வரலாற்றிற்கும், நாவலந்தீவின் விடுதலைப் பெருங்கடனத்திற்கும் (ப்ரகடனம்) உள்ள தாக்கத்தை உணர்த்தும் முக்கிய நிகழ்வுகளைக் கூற விரும்புகிறேன்.
காளீசர் கோயிலை இன்றிருக்கும் அளவிற்கு பெரிதாக்கிக் கட்டியவர்கள் மருதிருவரே. மருதிருவரின் கோயில் திருப்பணிகள் பரந்து பட்டவை; அவற்றில் காளையார் கோவில் பணியே மிக உயர்ந்தது. பெரிய மருதுவின் முயற்சியால், 157 அடியில், கோயிலின் 9 நிலைப் பெரிய கோபுரம், சோமேசர் திருமுன்னிலைக்கு (சந்நிதிக்கு) முன்னால் கட்டப்பட்டது. மதுரைக் கோயிலின் தெற்குக் கோபுரம் தவிர்த்து, மற்ற கோபுரங்கள் எல்லாம் காளீசர் கோபுரத்திலும் உயரம் குறைந்தவை தான். தெற்குக் கோபுரம் மட்டுமே 160 3/4 அடி உயரம் ஆகும். காளீசர் கோபுர உச்சியில் இருந்து கூர்ந்து பார்த்தால் (அல்லது தொலை நோக்காடி - telescope - கொண்டு பார்த்தால்), தெளிவான நாளில் மதுரைத் தெற்குக் கோபுரம் தெரியும். பழைய பாண்டியர் கால வழக்கப் படி, மதுரையைப் போலவே பெருங்கோபுரம் எடுத்து கோயிலைக் கட்டியதால் தான், மருதிருவர்கள் பாண்டியர் என்றே மக்களால் அழைக்கப் பட்டார்கள். நாட்டுப் பாடல் ஒன்று,
கருமலையிலே கல்லெடுத்து
காளையார் கோவில் உண்டுபண்ணி
மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய
மருது வாரதைப் பாருங்கடி
என்று அவர்களின் பெருமை சொல்லும். (இந்தப் பாட்டு "சிவகங்கைச் சீமை" திரைப்படத்திலும் வரும். பார்க்க வேண்டிய படம். கண்ணதாசன் எடுத்த படம். வீரபாண்டியக் கட்டபொம்மனைக் காட்டிலும் நல்ல வரலாற்றுப் படம்.)
கோயிலுக்கு வேண்டிய செங்கல்களை மானாமதுரைக்கு அருகில் உள்ள செங்கோட்டைச் சூளையில் உருவாக்கி, மக்களின் முயற்சியால், பல்லாயிரக் கணக்கானவர் வரிசையாய் நின்று, அஞ்சல் முறையில், செங்கோட்டை - மானாமதுரை - முடிக்கரை - காளையார் கோவில் என்ற (13 மைல்) வழியில் கொண்டு வரப் பட்டது. இது போன்ற கட்டுமான உத்தி (நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து கட்டும் உத்தி) அதுவரையில் யாராலும் செய்யப் பட்டதில்லை. இந்தக் கட்டுமானம் பற்றியே சிவகங்கையில் பல் வேறு கதைகள் உண்டு. (காளீசர் கோயிலில் பெரிய மருது தேரமைத்த கதையும், அதன் ஆசாரி பெரிய மருதுவிடம் இருந்து முடிவாங்கி ஒருநாள் மன்னரான கதையும், பின்னால் தேரோட்டம் முடியும் போது ஈகம் - தியாகம் - செய்து ஆசாரி உயிர்கொடுத்த கதையும் நம் மனத்தை ஈர்க்கும்; இன்னொரு முறை பார்க்கலாம்.) 1789 திசம்பரில் தொடங்கி 1794 ஆண்டிற்குள் இந்த ஆலயத் திருப்பணி முடிந்தது. கோயிலுக்குத் தெற்கே உள்ள ஆனைமடு ஊருணி மிகவும் பெரியது. மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அளவிற்கு அது இருக்கும்.
மருதிருவருக்கு கிட்டத் தட்ட இரண்டாம் தலைநகராகவே காளையார் கோவில் இருந்தது. அவர்களின் படைகள் குவிக்கப் பட்டு, படைத் தளமும் அங்கு தான் இருந்தது. படைத்தளபதி சின்ன மருது, சிறுவயலில் அரண்மனையில் தங்கியது போக, பெரும்பாலான நேரம் காளையார் கோயிலிலேயே இருந்து, படைநடவடிக்கைகளை கவனித்திருக்கிறார். அத்தனை படைத் தளவாடங்களும் கானப்பேர்க் கோட்டைக்குள் தான் இருந்தன. படையும் சிறப்பான திறமைகள் பெற்று ஆங்கிலேயர் படைக்குச் சரிநிகர் சமானமாய்த்தான் இருந்தது. இந்தக் காட்டினுள் மருதிருவரும் அலையாத இடம் கிடையாது.
பின்னால், மருது பாண்டியருக்கும் ஆங்கிலேயருக்கும் (கூடவே ஆற்காடு நவாபுக்கும்) இடையே, வரிவிதிப்பு மீறல், தன்னாளுமை போன்றவற்றால் பெருத்த சண்டைகள் ஏற்பட்டன. அந்தக் காலத்தில் சின்ன மருது ஒரு பெரிய தடவழி (strategy)க்காரர். படையுத்திகளில் வல்லவர். அவர் தன் நாட்டு விடுதலையை மட்டும் பாராமல், நாவலந்தீவின் விடுதலைக்கே முதன்மையாய், வெள்ளைக்காரரை வெளியேற்ற வேண்டும் என்று, ஓர் எதிர்ப்புப் போராளி முன்னணியையே, உருவாக்கினார். அதில் திப்பு சுல்தான், வட கேரளக் குறுநிலக் காரர்கள், கன்னட அரசர்கள், மராட்டியத் தலைவர்கள், பாஞ்சாலங் குறிச்சி முதற்கொண்டு பல்வேறு தமிழகப் பாளையக் காரர்கள், போராளிக் கழகங்கள் என்று பல்வேறு உறுப்பினர்கள் இருந்திருக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த முன்னணி விரிந்து பரந்திருந்தது. இவர்களின் கூட்டங்கள் பலகாலம் திண்டுக்கல், திருப்பாச்சிப் பகுதிகளில் நடந்திருக்கின்றன. கூட்டணியின் தலைவரான சின்னமருதுவின் தடவழிக்கு இணங்கவே யாவரும் பணியாற்றியிருக்கிறார்கள். சின்னப் பாண்டியரின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" - படிக்க வேண்டிய ஒன்று - 1801 ஜூன் 16 க்கு முன்னால் திருவரங்கம் கோயிலின் வெளி மதிலில் முதன்முதலாய் ஒட்டப் பெற்றது. (வேடிக்கையைப் பார்த்தீர்களா? இந்திய விடுதலையின் முதல் எழுச்சிவெளியீடு சீரங்கம் அரங்கன் கோயில் சுவரில் ஒட்டப் பட்டிருக்கிறது.) பின்னால், திருச்சிக் கோட்டையின் வெளிச்சுவரிலும் ஒட்டப்பட்டது.
இந்தச் சீரங்க வெளியீட்டை அறிந்த ஆங்கிலேய அரசு, (அப்பொழுது சென்னையில் ஆங்கிலேயரின் ஆட்சியாளர் இராபர்ட் கிளைவின் மகனான எட்வர்ட் கிளைவ்.) 6.7.1801 ல் எதிர்ப்பு முன்னணியை முளையிலேயே கிள்ள வேண்டும் என்ற நோக்கில், அரசாணை பிறப்பித்தது. ஆங்கிலேயர் படையினர், பாஞ்சாலங்குறிச்சியில் தொடங்கி, ஒவ்வொருவராய் அழித்து, இடையில் மைசூரையும் 2 மாதங்களில் தொலைத்து, முடிவில் சிவகங்கைக்கு வந்தார்கள். கிட்டத் தட்ட 1801 மார்ச்சில் இருந்து அக்டோ பர் வரை 8 மாதங்கள் சிவகங்கைச் சீமையை முற்றுகையிட்டனர். ஆங்காங்கே சிறுசிறு வெற்றிகள் பெற்றாலும் முழு வெற்றியை ஆங்கிலேயரால் பெறவே முடியவில்லை. இத்தனைக்கும், அதுவரை இந்தியாவில் நடந்த எந்தப் போரிலும், இவ்வளவு ஐரோப்பியர் இறந்ததில்லையாம்; சிவகங்கைப் போரில் தான் அதிகம் பேர் இறந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி தீர்மானமாய் நிலைத்ததில் இந்தப் போர் முகன்மையானது. (This war was decisive in firmly establishing English rule in India).
"காளையார் கோவிலைக் கைப்பற்றினால் தான், சிவகங்கை கவிழும்; முன்னணி உடையும்; மற்ற போரளிகள் தொய்ந்து போவார்கள்; சென்னைக் கோட்டை உறுதிபெறும், ஆங்கில அரசு நாவலந்தீவில் நிலைக்கும்" என்ற கருத்தில், கர்னல் அக்னியூ காட்டைச் சுற்றி வளைத்தான். 40 மைல் சுற்றளவும், குறுக்கே 11-12 மைல் நீளமும் கொண்ட காட்டின் இடையே அப்பொழுது வயல்களோ, ஊர்களோ இல்லை. காட்டை ஒரு பக்கம் வெட்டத் தொடங்கினால், நிழல் குறைந்து ஆங்கிலேயர் அணி (அதனுள் இந்தியர் மட்டுமில்லை, மலாய்க்காரரும் இருந்தனர்.) வெய்யிலில் நகர முடியாமல் தடைப் பட்டது. காட்டிற்குள் செல்லும் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. முடிவில், காட்டிக் கொடுத்தவர்களின் உதவியோடு, மருது படை பயன்படுத்திய கமுக்க (secret) வழியை அறிந்து, அதன் வழியே படைநடத்தி, 30/9/1801 இரவு கழிந்து மறுநாள் புலரும் நேரத்தில், காளையார்கோவில் ஊர்வாயிலுக்கு அக்னியூ வந்து சேர்ந்தான்.
அதற்கு இடையில் ஒற்றர் மூலம் "கோயில் கோபுரத்தைப் பீரங்கி கொண்டு தகர்க்க" அக்னியூ திட்டமிட்டிருப்பதை அறிந்த மருது பாண்டியர் யாரும் நினைக்க முடியாத ஒரு செயலைச் செய்தார்கள். (பீரங்கி வைத்து பிளப்பது என்னும் அச்சுறுத்துக் கருத்தீட்டைக் குமுகத்தில் பலரும் ஆங்கிலேயர் காலத்தில் அறிந்த காரணத்தால், பின்னொரு காலத்தில் பாரதிதாசன் வேடிக்கையாகச் சொல்லுவார்: "சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் எக்காலம்?" ஒரு சிலர் கோவப் படாதீர்கள்!! இங்கே கோபுரம் பிளக்கும் கதை தான் குறியிடப் படுகிறது ;-))
கில்ஜிகளின் காலத்தில், திருவரங்கக் கோயில் உலாத் திருமேனிகளுக்கு ஆபத்து வந்த போது, காளையார் கோயிலில் தான் அவை பாதுகாக்கப் பட்டன. (இது திருக்கோட்டியூர் வழியான தொடர்பு. இராமனுசர் காலத்தையும் அவருக்குப் பின்னால் ஏற்பட்ட உறவுகளையும் இங்கு எண்ணிக் கொள்ளுங்கள். இன்றைக்கும் திருக்கோட்டியூர் சிவகங்கைச் சமத்தானக் கோயில்.) இப்பொழுது காளையார் கோவிலுக்கே பாதகம் என்றால், என்ன செய்வது? 1783 - ல், திருவில்லிபுத்தூர் கோபுரத்தைத் தகர்ப்பதாய் அறிவித்து, நெல்லைப் பாளையக்காரர்கள் கப்பம் கட்ட ஒப்பிய பின்னரே, ஆங்கிலேயர் கோபுரத் தகர்ப்பைக் கைவிட்டனர். [இன்றைக்குத் தமிழ்நாடு அரசின் சின்னமாகப் போற்றுகிறோமே அந்தக் கோபுரம் தான் இது.] இதே போல சங்கரன் கோயில் கோபுரத்தையும் (பார்க்க வேண்டிய கோயில்) இடிப்பதாக அறிவித்த பின்னால், நெல்கட்டும் செவல் பூலித்தேவர், கோயில், கோபுரத்தைக் காப்பாற்றுவதற்காகச் சண்டை போடாமல் சரணடைந்தார். கோபுரத்திற்காக எதிரியிடம் சரணடைந்தவர் தமிழக வரலாற்றில் பலர் இருந்திருக்கிறார்கள். கோபுரங்கள் சொல்லும் வரலாற்றுக் கதைகள் தமிழகத்தில் மிகுதி.
அத்தனையையும் சீர்தூக்கிப் பார்த்த மருதிருவர், இரவோடு இரவாய் 78000 பேர் கொண்ட தங்கள் படையை, தளவாடங்களுடன், நகரை விட்டு நகர்த்தியிருக்கிறார்கள். 1801 அக்டோபர் முதல் தேதி அக்னியூ ஊரில் நுழைந்தான்; ஓர் எதிர்ப்பும் இல்லை. முடிவில் ஒரு வெடி வெடிக்காமல், ஒரு துமுக்கு (rifle) வேட்டு இல்லாமல், ஒரு குண்டு இல்லாமல், ஆங்கிலேயர் கொடி காளிசர் கோபுரத்தின் உச்ச கலசத்தில் ஏறிப் பறக்க விடப்பட்டது; கவனம் கொள்ளுங்கள், கொடிபறந்தது கோட்டை வாசலில் அல்ல; கோபுர உயரத்தில். ஆக, காளீசர் கோபுரத்தையே ஆங்கிலேயர் பிடித்தார்கள். அதில்தான் அவர்களின் முழுக்கவனமும் இருந்தது. [பின்னால் அக்னியூவின் கோபுரத் தகர்ப்பு ஆணை ஆங்கிலேய அரசிதழிலேயே வெளிவந்தது.]
ஆக ஒரு கோபுரத்திற்காக, அதைக் காப்பாற்றுவதற்காக, தமிழக விடுதலை, ஏன் இந்திய விடுதலை, 146 ஆண்டுகள் தள்ளிப் போனது. போரே இல்லாது போனதால், போராளிகளின் போராட்டமும் பின்னால் பிசுபிசுத்தது. இத்தனைக்கும் மருதுபாண்டியர் பெருத்த வலிமையுடன் இருந்தார்கள் என்றுதான் வரலாறு சொல்லுகிறது. மதுரைக் கோபுரம் தெரியக் கட்டிய பெரிய மருது, காளீசர் கோபுரத்தைக் காக்காமல் வேறு என்ன செய்வார்? "இப்படி நடந்திருக்குமானால் - what if" என்ற கேள்வி வரலாற்றில் சிக்கலானது தான். ஆனாலும், சின்ன மருதுவின் "ஜம்புத்வீபப் பிரகடனம்" படித்தவருக்கும், அந்தக் காலப் போர்க் கூட்டணியைப் புரிந்து கொண்டவருக்கும், கிழக்கிந்தியக் கும்பனியின் அந்தப் பெரிய போர் முயற்சியை ஆழ்ந்து ஆய்ந்தவருக்கும் நான் சொல்லுவது புரியும். It is perplexing that we lost an opportunity of throwing out the English rule just for the sake of a Temple Tower.
இன்றையத் தமிழ் இளையர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் சொன்னது கதையல்ல, உண்மை. காளையார் கோயில் போர், இந்திய விடுதலையின் ஒரு முகன்மைக் குறியீடு. (வேலூர்க் கோட்டைச் சிப்பாய்ப் புரட்சியெல்லாம் அதற்கு அப்புறம் வந்தது, 1857 ல் வடக்கே நடந்த சிப்பாய்ப் புரட்சியும் இன்னும் பல ஆண்டு கழித்து வந்தது.) இந்திய வரலாற்றில் மருது பாண்டியரின் பங்களிப்பு சரியான முறையில் மக்களுக்குத் தெரிவிக்கப் படவில்லை.
காளையார் கோயிலை வசப்படுத்திய அக்னியு, பத்தே0 நாட்களில், அக்டோபர் 11 அன்று, அந்தக் காட்டையே கொளுத்தினான்; சிவகங்கை, திண்டுக்கல் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான் அந்தச் சீமை; காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது. உடன் இருந்த மெய்க்காப்பாளன் கருத்தான் காட்டிக் கொடுக்க, தொடையில் குண்டடி பட்டு, சின்னப் பாண்டியர் 4/10/1801 லேயே கைதானார். அடுத்த நாளில் கருத்தானின் கைகாட்டலில், அவருக்கு இருந்த பக்கவாதக் குறைவை சூழ்ச்சியால் ஏற்பட வைத்து, பெரிய பாண்டியரைக் கைது செய்தனர். (இரண்டு பாண்டியரும், நாட்டின் மேல் இருந்த காதலால், காளையார் கோவில் காட்டை விட்டு, அகலவே இல்லை; நினைத்திருந்தால் வட கேரளத்திற்கும், கன்னட தேசத்திற்கும் தப்பி, பின்னால் மீண்டு வந்து, அணிசேர்த்து, ஆங்கிலேயருக்கு எதிராய்த் திரும்பவும் படையெடுத்திருக்கலாம்; ஆனால் செய்யவில்லை. மக்களின் மேல் இருந்த பற்று, நாட்டை விட்டு நகர வைக்காமல், அவர்கள் கண்ணை மறைத்தது.) இருவரும் திருப்புத்தூரில் அக்டோ பர் 24-ல் தூக்கில் இடப்பட்டனர். சிவகங்கை அரச குலம் அந்த மூன்றே வாரத்தில் ஒருவரில்லாமல் முற்றிலுமாய்க் கருவறுக்கப் பட்டது.
மருதிருவர், சிவகங்கை பற்றிய நிறையச் செய்திகளை, வரலாற்றின் இந்தப் பகுதியை அறிய விரும்புவோர், பெரியவர் செயபாரதியின் அகத்தியர் மடலாடற் குழுவிற்குப் போனால், ஏராளமாய்ப் படிக்க முடியும். கூடவே மீ.மனோகரனின் "மருது பாண்டிய மன்னர்கள் 1780-1801" என்ற பொத்தகத்தையும் (அன்னம் வெளியீடு, 2, சிவன்கோயில் தெற்குத் தெரும் சிவகங்கை 623 560) படிப்பதற்கு நான் பரிந்துரை செய்வேன்.
No comments:
Post a Comment