Tuesday 30 August 2011

திருக்குன்றக்குடி 3

கடாரத் தமிழ்ப் பேரறிஞர்டாக்டர் எஸ்.ஜெயபாரதி

 

குன்றக்குடி
ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீஷண்முகநாத ஸ்வாமி
                    குன்றக்குடி மலையின் மேலுள்ள கோயில் ஷண்முகநாதப் பெருமானின் கோயில். வள்ளி தெய்வயானை சமேதரராக விளங்குகிறார் என்று சொன்னேன்.
                    குன்றக்குடி ஒரு தோற்றத்திற்கு மயிலைப் போல தோன்றும்.     ஆகவே அதற்கு 'மயூரகிரி' என்ற பெயரும் 'மயில் மலை' என்ற பெயரும் உண்டு என்றும் சொன்னேன்.   
                    மருது சேர்வைக்காரர்கள் குன்றக்குடியில் திருப்பணியைத் தொடங்கும்போது அந்தக் கோயில் சோபையே இல்லாமல் இருந்தது.

                    மலையின் மேலுள்ள கருவறையில் வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் ஷண்முகநாதப் பெருமானின் விக்கிரகத்தை எடுத்துப் பார்த்தபோது அட்டபந்தனம் சார்த்திய பள்ளத்தில் அந்த மூர்த்தத்துக்குரிய யந்திரம் புரண்டு கிடந்ததைக் கண்டனர்.
                    ஆற்றல் மிக்க தெய்வமாக விளங்கிய அந்த மூர்த்தத்தின் ஆற்றலைப் பங்கப்படுத்துவதற்காக யாரோ அந்த யந்திரத்தைப் புரட்டிப் போட்டிருந்தார்கள்.
                    அருணகிரிநாதர் வந்து பாடியபோது மிகச் சிறந்து விளங்கிய குன்றக்குடி, அவர் பாடிய சிறப்பால் தெய்வீக உருவும் திருவும் சேர்ந்து ஆற்றல் மிக்க ஸ்தலமாக விளங்கியிருக்கும்.
                    ஏதோ காரணத்தால் யாரோ மந்திர தந்திரங்களின்மூலம் ஊறு செய்திருந்தனர்.
                    இதெல்லாம் சாதாரணமாக அவ்வப்போது ஆங்காங்கு நடைபெறும் காரியம்தான்.
                    எல்லாக் கோளாறுகளையும் மருது சேர்வைகள் சரிபடுத்தினர்.

                    மிகவும் விரிவான முறையில் திருப்பணியை மருது சேர்வைக் காரர்கள் செய்தனர். மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. மலை மேல் ஏறுவதற்குரிய படிகள் மலைச்சரிவில் வெட்டப்பட்டன.
                    புதிய மண்டபங்கள் கட்டப்பட்டன.
                    மேற்கோயில் தக்க முறையில் செப்பனிடப்பட்டு பெரிய அளவில் விரிவாக்கப்பட்டு அழகு படுத்தப ்பட்டது. ஒரே நேரத்தில் பலர் அங்கு இருக்கமுடியும் வண்ணம் அது விளங்கியது.

                    கருவறையின் முன்னிலையில் இரு பெருந்தூண்கள் நிறுவினர். அந்தத் தூண்களில் ஒன்றில் பெரிய மருது சேர்வைக்காரரின் சிலையும் இன்னொன்றில் சின்ன மருது என்னும் மருது பாண்டியன் சேர்வைக்காரரின் சிலையும் விளங்கின. ஆள் உயரத்தைவிட - Larger than life-size சிலைகள்.
                    இருவரும் 'நித்திய சதா சேவை' என்னும் அமைப்பில் சண்முகநாதப் பெருமானை என்றும் தரிசித்து வணங்கிக்கொண்டிருக்கும் பாவனையில் அமைந்த சிலைகள்.
                    கும்பாபிஷேகம் செய்விக்க முடிவு செய்யப்பட்டபோது, அதற்காக சாந்துப் புலவரைக்கொண்டு ஒரு பிரபந்தத்தைப் பாடுவித்தார்கள்.

                    பண்டைய காலத்தில் பாண்டியநாடு இருந்த பொற்காலத்தைப் போன்றதொரு பொற்காலத்தை மீண்டும் உருவாக்கவேண்டும் என்ற பேரவா அவர்களுக்கு எப்போதும் இருந்துவந்தது.
                    பழந்தமிழ் மன்னர்கள் எப்படி ஈரமும் வீரமும் ஈகையும் கொண்டு விளங்கினரோ அதேபோல இவர்களும் விளங்க நினைத்தனர்.
                    பழைய சுதேசி மன்னர்களைக் கொண்டு அந்தப் பொற்காலத்தை கொண்டுவர நினத்த சின்னமருது சேர்வை, மதுரை நாயக்கர்களின் கடைசி அரசியாகிய ராணி மீனாட்சியின் வளர்ப்பு மகனும் ஆற்காட்டு நவாபிடம் மதுரை அரசைப் பறிகொடுத்திருந்தவரும் ஆகிய விஜயகுமார திருமலை நாயக்கருக்கு அடைக்கலம் கொடுத்து 'வெள்ளிக்குரிச்சி' என்னும் ஊரில் பாதுகாப்பாக வைத்திருந்தார்.
                    மருதிருவரின் ஆஸ்தானத்தில் இருபத்தேழு புலவர்கள் இருந்தனர்.

                    அவர்களில் முக்கியமானவர் சாந்துப்புலவர் என்னும் இளவயது மேதை.
                    சாந்துப் புலவர் ஒரே நாளில் 'மயூரகிரிக் கோவை' என்னும் நானூறு பாடல்கள் கொண்ட பிரபந்தத்தை பாடினார். மலையின் மீது ஏற ஆரம்பிக்கும் இடத்தில் உள்ள தோகையடி விநாயகர் சன்னிதியில் அது பாடப்பட்டு அரங்கேற்றம் பெற்றது. அதற்காக சிறப்பு மானியத்தையும் சேர்வைக்காரர்கள் வழங்கினர்.

                    பல ஊர்களை அவர்கள் சீரமைத்துள்ளனர். மிக அழகிய சிற்றூர்களை செப்பமாக மருது பாண்டியர் அமைத்திருந்தார்.

                    அவற்றில் ஒன்று, 'அரண்மனைச் சிறுவயல்' என்னும் ஊர். அதன் அமைப்பை மருது பாண்டியரைக் காணவந்த கிழக்கிந்தியக் கும்பினி கர்னல் வெல்ஷ் தம்முடைய 'Military Reminiscences' என்னும் நூலில் மிகவும்  சிலாகித்துப் பாராட்டி எழுதியுள்ளார்.

                    பெரிய மருது சேர்வைக்காரர் ஆட்சிக்குரியவராகக் கருதப்பட்டார். ஆனால் சின்ன மருது பாண்டியர்தான் சிவகங்கைச் சீமையின் நிர்வாகத்தையெல்லாம் கவனித்துக் கொண்டவர். பெரிய மருது சேர்வைக்குத் தெரியாமலேயே பாஞ்சாலங்குரிச்சியின் ஊமைத்துரைக்கு அடைக்கலம் வழங்கியதும் அவர்தான்.    
                    அவருடைய அரண்மனை, அரண்மனை சிறுவயலில் இருந்தது. அதனையே தம்முடைய தலைமையகமாக மருது பாண்டியர் கொண்டிருந்தார்.

                    மருதிருவரின் கோட்பாடுகளின்படி குன்றக்குடியையும் பெரிதும் சீரமைத்தனர்.
                    வீதிகள் செவ்வையாக நாற்சதுரமாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு முனங்கிலுமிருந்து நான்கு திக்குகளிலும் வெளியூர் செல்லும் சாலைகள் இணையுமாறு அமைத்தார்கள். ஊருக்கு நடுவிலேயே சோலைகள் இருந்தன.

                    தடாகங்களைச் செப்பனிட்டனர்.
                    தங்கள் பெயரால் ஒரு பெரிய குளத்தை வெட்டினர்.
                    'மருதாபுரி' என்னும் பெயரில் இன்றும் அது இருக்கிறது.
                    ஊருக்குள்ளும் ஊரைச் சுற்றியும் ஆயிரக்கணக்கில் தென்னை மரங்களை நடுவித்தனர். பல பழமரங்களும் நடப்பட்டன.

                    இவ்வாறு குன்றக்குடி மேன்மையும் சிறப்பும் பெற்று விளங்கியது.

No comments:

Post a Comment