Wednesday 3 August 2011

தூசு தட்டப்படும் தா.கிருஷ்ணன் வழக்கு. கருணாநிதி விசாரிக்கப்படுவாரா?

கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் அதிகாலையில் வாக்கிங் சென்ற தா.கிருட்டிணன், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். மு.க.அழகிரி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ். தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கின் போக்கு திசை மாறியதால், வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரியது அ.தி.மு.க. அதன்படி, ஆந்திர மாநிலம் சித்தூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.
ஆனால், குற்றம் சாட்டப்பட்ட 13 நபர்களையும் நிரபராதிகளாக்கி, விடுதலை செய்தது சித்தூர் நீதிமன்றம். இதை எதிர்த்து தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்யவில்லை. இந்த நிலையில், 'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தா.கிருட்டிணன் கொலை வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்!’ என வாக்குறுதி கொடுத்திருந்தார் ஜெயலலிதா. ''தா.கி. வழக்கு மீண்டும் உயிர்பெறும்'' என்கிறார்கள் மதுரையில்! 

'உன்னை வீழ்த்தியவர்கள் இன்று தெய்வத்தின் தண்டனை​யால் வீழ்ந்துவிட்டார்கள். அம்மா ஆட்சியில் உண்மைக் குற்றவாளிகளுக்குச் சட்டப்படி தண்டனை உறுதி!’ என மதுரையில் அ.தி.மு.க. தொண்டர்கள், தா.கி-யின் புகைப்படத்துடன் மெகா சைஸ் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பைக் கிளப்பி இருக்கிறார்கள்.
மே 20-ம் தேதி தா.கிருட்டிணனுக்கு எட்டாம் ஆண்டு நினைவு தினம். இதற்காக மதுரையில் அகமுடையார் இளைஞர் பேரவையினர் நடத்திய தா.கிருட்டிணன் படத் திறப்பு நிகழ்ச்சியிலும் அனல் பறந்தது.
மூவேந்தர் பண்பாட்டுக் கழகத் தலைவர் பரங்குன்றம், ''தா.கி. கொலை வழக்கை சரியானபடி நடத்தவில்லை. அதனால், எல்லோரும் விடுதலையாகிவிட்டார்கள். அப்படி என்றால், தா.கி-யை யார்தான் கொன்னது? நாவரசு கொலை வழக்கில் அப்பீலுக்குப் போன அரசு, தா.கி. கொலை வழக்கில் ஏன் அப்பீலுக்குப் போகவில்லை?'' என்றார் காட்டமாக.

தா.கி. கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி, அவர் கொலையுண்டுகிடந்த இடத்தில் ஜூன் 10-ம் தேதி அகமுடையார் அமைப்புகளைத் திரட்டி உண்ணாவிரதம் இருக்கும் தீர்மானத்தை நிறைவேற்றிப் பேசிய அகமுடையார் இளைஞர் பேரவையின் மாநிலத் தலைவர் ஜெயமணி, ''விதி வலியதுன்னு சொல்வாங்க.
எட்டு வருஷத்துக்கு முந்தி இதே தேதியில்தான் தா.கி-யாரை வெட்டிக் கொன்றார்கள். இப்போது அதே தேதியில், கருணாநிதியின் மகள் கனிமொழி திகார் ஜெயிலுக்குப் போயிருக்கிறார். பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளைகளுக்கு. அது மாதிரி தா.கி-க்குக் கருணாநிதி செய்த கொடுமைக்கு, இப்போது அவர் மகள் கம்பி எண்ணுகிறார்!'' என்றார்.


தேவர் பொலிட் பீரோ உறுப்பினர் அரப்பா பேசுகையில், ''துக்கம் கேட்கக்கூட தா.கி. வீட்டுக்கு கருணாநிதி வரவில்லை. கொலையைக் கண்டித்தோ, இரங்கல் தெரிவித்தோ... பொதுக் குழுத் தீர்மானம்கூட போடவில்லை. அதனால்தான், தா.கி. கொலையின் பின்னணியில் கருணாநிதியும் இருக்கிறார் என்று சொல்கிறோம்.
அவருக்கு இந்தக் கொலையின் ரகசியங்கள் நன்றாகவே தெரியும். அதனால், போலீஸ் மறு விசாரணையை அவரிடம் இருந்து தொடங்க வேண்டும். இப்போது ஸ்பெக்ட்ரம் சதியில் கனிமொழி எப்படி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரோ, அதுபோல தா.கி. கொலை வழக்கில் கருணாநிதி மீதும் குற்றம் சாட்டப்பட வேண்டும்!'' என்றார்.


இந்த வழக்குபற்றி பரபரப்பான அறிக்கைகளை வெளியிட்டு வரும்  வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், ''மகனைக் காப்பாற்றுவதற்காக கருணாநிதி தனது பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார். இன்றைய தமிழக அரசு முறையீடு செய்தால், நீதிமன்றம், மறு விசாரணைக்கும் அப்பீலுக்கும் கட்டாயம் அனுமதி கொடுக்கும். இந்த வழக்கில் இருந்து விடுதலையான சிலர், அப்ரூவராக மாறத் தயாராக இருப்பதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது.
எனவே மறு விசாரணை நடத்தினால்,  அச்சுறுத்தலுக்குப் பயந்து பிறழ் சாட்சியம் அளித்தவர்கள், இப்போது மனசாட்சிப்படி உண்மையைச் சொல்வார்கள். இந்த வழக்கு அப்பீலுக்கு உகந்தது இல்லை என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் சொன்னதாகச் சொல்கிறார் கருணாநிதி. அவரிடம் யார், எப்போது கருத்துக் கேட்டார்கள் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நான் கேட்டதற்கு, கடைசி வரை கருணாநிதி அரசு பதில் சொல்லவே இல்லை!
மேலும் இந்த வழக்கில் தா.கி. எழுதிய கடிதங்கள் உள்பட முக்கியமான ஆவணங்களை போலீஸ் மறைத்துவிட்டது. தா.கி-யின் மனைவியை கடைசி வரை நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவைக்கவில்லை. தா.கி-யின் தம்பி ராமையா, இவர் மகன் நெடுஞ்செழியன் ஆகியோர் பிறழ் சாட்சியம் அளித்ததன் ரகசியம் என்ன? தா.கி-யின் இன்னொரு தம்பிக்கு தி.மு.க. அரசில் முக்கியப் பதவி கொடுத்தது ஏன் என்பதையும் இன்றைய அரசு விசாரிக்க வேண்டும்!'' என்றார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தடதடக்கப்போகிறது தா.கி. வழக்கு!

No comments:

Post a Comment