Thursday 17 November 2011

Kurunila Mannan movie - Maruthupandiyar Song



இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி

1930-களில் இருந்து 1960-கள் வரையில் உள்ள காலத்தை கர்நாடக இசை உலகின் பொற்காலம் என்று அழைப்பதுண்டு. பல்வேறு மேதைகள் ஒரே சமயத்தில் கோலோச்சிய காலமது. அந்த காலகட்டத்தில் பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை, இராமநாதபுரம் சி.எஸ்.முருகபூபதி ஆகிய மூவரும் மிருதங்க உலகை தமதாக்கிக் கொண்டிருந்தனர். மூவரில், முருகபூபதிதான் அதிக காலம் வாழ்ந்தவர் என்ற போதும், இவர் வாழ்க்கையே மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. “மிக அரிய பொக்கிஷங்கள், பெரும்பாலும் பொது மக்களின் கண்களின் இருந்து விலக்கப்பட்டே இருக்கும்”, என்ற கூற்று முருகபூபதியாரைப் பொருத்த மட்டில் முற்றிலும் உண்மையானது.
முருகபூபதியின் முன்னோர்கள் விவசாயத்தில் ஈடுபட்டவர்களாகத் தெரிய வருகிறது. இந்தக் குடும்பத்துக்கும், இராமநாதபுரம் அரசர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. இராமநாதபுரம் மன்னர்கள் வரலாற்றைப் பார்க்கும் போது, அவர்கள் சங்கீதத்தில் பெரும் ஈடுபாட்டுடன் விளங்கியதை அறிய முடிகிறது. காசி நாத துரை பொன்ற மன்னர் வம்சாவளியினரே கச்சேரி செய்யும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சங்கீதத்தை போஷிக்க சபைகள் உருவாவதற்கு முன்னர், இது போன்ற சமஸ்தானங்களே அந்த வேலையை திறம்படச் செய்து வந்தன. அவ்வகையில், முருகபூபதியின் தந்தையார் சித்சபை சேர்வை அவர்கள், இராமநாதபுரம் மன்னர் ஆதரவில், புதுக்கோட்டை மான்பூண்டியா பிள்ளையிடம் குருகுலவாசம் செய்து லயத்தில் தேர்ச்சியைப் பெற்றார்.
“பூச்சி ஸ்ரீனிவாஸ ஐயங்கார் போன்ற மேதைகளுக்கு அவர் வாசித்திருந்த போதும் அவர் கச்சேரி வித்வானாக விளங்கவில்லை. ஆத்மார்த்தமாகவே மிருதங்கக் கலையை வாசித்து வந்தார். எப்போதும் அவர் வாய் ஜதிகளை உதிர்த்துக் கொண்டே இருக்கும்”, என்று ஒரு நேர்காணலில் சங்கரசிவ பாகவதர் கூறியுள்ளார். இராமநாதபுரம் அரணமனைக்கு இசைக் கலைஞர்கள் வரும் போதெல்லாம் சித்சபை சேர்வையின் வீட்டிலேயே தங்கினர். “அரண்மனைக்கு வராத வித்வான்களே இல்லை. அவர்கள் பாடாத பாட்டை இது வரை யாரும் பாடவில்லை”, என்று முருகபூபதியே கூறியுள்ளார்.







சித்சபை சேர்வைக்கு நான்கு மகன்கள். அவர்களுள் இருவர் சங்கீதத் துறையில் சிறந்து விளங்கினர். இரண்டாவது மகனான சங்கரசிவத்தை இராமநாதபுரம் மன்னர் ஹரிகேஸநல்லூர் முத்தையா பாகவதரிடம் குருகுலவாசம் செய்ய அனுப்பி வைத்தார். அவரிடம் கற்ற பின், கச்சேரிகள் செய்தாலும், சங்கீத ஆசிரியராகத்தான் சங்கரசிவ பாகவதர் பெரும் புகழை அடைந்தார். குருகுலவாசத்தில் கற்ற வாய்ப்பாட்டை தவிர, வயலின், மிருதங்கம் ஆகியவற்றையும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலையும் இயற்கையாகவே வரப்பெற்றிருந்தார் சங்கரசிவம்.
சித்சபை சேர்வையின் நான்காவது மகனான முருகபூபதி, தான் வளர்ந்த சூழலினால் சங்கீதத்தின் பால் ஈர்க்கப்பட்டார். தன் தந்தை வாசிப்பதைப் பார்த்து தானும் மிருதங்கத்தை இசைக்க ஆரம்பித்தார். சிறு வயதில் முருகபூபதி வாசிப்பதைப் பார்த்த அழகநம்பியா பிள்ளை, அவரை மடியில் அமர்த்திக் கொண்டு, மிருதங்கத்தில் தொப்பியை கையாள வேண்டிய முறையை எடுத்துச் சொன்னதை முருகபூபதியே ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.
இள வயதில், கேட்டதை மட்டும் வைத்துக் கொண்டு விளையாட்டாய் வாசித்துக் கொண்டிருந்த முருகபூபதியை நெறிப்படுத்தியவர் சங்கரசிவ பாகவதர்தான். முருகபூபதியின் சிறு வயது அனுபவங்களை அறிந்த அவரது சீடர் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி “என் குருநாதர் கற்கும் போது ராமநாதபுரம் ஈஸ்வரன் போன்ற சிலரும் சங்கரசிவ பாகவதரிடம் மிருதங்கம் கற்று வந்தனர். அப்போதெல்லாம் பூபதி அண்ணாவின் கவனம் வாசிப்பில் இருக்கவில்லை. ராமநாதபுரம் ராஜாவின் பிள்ளைகளுடன் சேர்ந்து கால்பத்து ஆடுவது, குஸ்தி போடுவது போன்றவற்றில்தான் அவருக்கு ஈடுபாடு இருந்தது. அண்ணாவுக்குத் தெரியாமல் விளையாடச் சென்றுவிடுவார். சாயங்காலம் வாசல் திண்ணையில் சங்கர சிவ பாகவதர் அமர்ந்திருப்பார் என்பதால், சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் நுழைந்து, மற்ற சீடர்களிடம், “அண்ணா, இன்னிக்கு என்ன பாடம் போட்டார்”, என்று கேட்டுக் கொள்வார். ஒரு முறை சொன்னதைக் கேட்டு வாசிக்கத் தொடங்கினால், அதை அவர் ஏற்கெனவே பல முறை வாசித்திருக்கிறார் என்று எண்ணத் தோன்றுமாம். அவர் வாசிக்கத் தொடங்கியதும், “முருகன் வந்துட்டான் போல இருக்கு”, என்று புன்னகையுடன் கூறுவாராம் சங்கரசிவம்.”, என்கிறார்.














முருகபூபதியின் வாழ்வில் திருப்புமுனையாய் இரண்டு கச்சேரிகள் அமைந்தன. முதல் கச்சேரி சென்னை ஆர்.ஆர்.சபாவில் நடை பெற்றது. அப்போது சங்கரசிவ பாகவதர் சென்னையில் தங்கி பலருக்கு இசை பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். முருகபூபதியும் அவருடன் தங்கி இருந்தார். ஆர்.ஆர்.சபாவில் நடக்கவிருந்த செம்மங்குடியின் கச்சேரிக்கு சௌடையாவும், பாலக்காடு மணி ஐயரும் பக்கவாத்யம் வாசிக்க எற்பாடாகி இருந்தது. பம்பாய் சென்றிருந்த மணி ஐயர், கச்சேரி தினத்தன்றுதான் சென்னை அடைவதாக இருந்தது. இடையில் ஏற்பட்ட ரயில் தாமதங்களால் மணி ஐயரால் சரியான நேரத்துக்கு வந்து சேர முடியாது என்று தெரிந்ததும், ஒரு ரயில் நிலையத்திலிருந்து தன் நிலை பற்றி தந்தி கொடுத்தார். மணி ஐயர் பிரபலத்தை அடைந்திருந்த காலமது. மணி ஐயரின் வாசிப்பை கேட்க வந்தவர்கள் ஏமாற்றமடையா வண்ணம் வாசிக்க யாரை கூப்பிடலாம் என்று தவித்துக் கொண்டிருந்த சபா நிர்வாகிகள், இராமநாதபுரம் ஈஸ்வரனை அணுகினர். அப்போது தற்செயலாக் முருகபூபதி ஈஸ்வரனின் வீட்டுக்கு வந்திருந்தார். விஷயம் அறிந்ததும், இராமாதபுரம் ஈஸ்வரன் முருகபூபதியை பரிந்துரை செய்தார். “எனக்கு சற்று பயமாகத்தான் இருந்தது. ரேட்டை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்திக் கேட்டால் நம்மை வாசிக்க சொல்ல மாட்டார்கள் என்றெண்ணி அதிகம் கேட்டேன். அவர்களுக்கு இருந்த அவசரத்தில் நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாராக இருந்தனர்.”, என்று ஓர் நேர்காணலில் முருகபூபதியே கூறியுள்ளார். அன்றைய கச்சேரியில் முருகபூபதியின் வாசிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. கச்சேரியின் நடுவில் அவர் வாசித்த தனி ஆவர்த்தனத்தை தொடர்ந்து கூட்டம், “முருகபூபதிக்கு இன்னொரு தனி”, என்று கூச்சலிட ஆரம்பித்துவிட்டது. ”அன்றைக்கு செம்மங்குடி எனக்கு மூன்று தனி கொடுத்தார். ரசிகர்களும் வெகுவாக என்னை உற்சாகப்படுத்தினர்.”, என்றும் முருகபூபதி கூறியுள்ளார்.
பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமண்ய பிள்ளை வாழ்வில் நடந்தது போலவே முருகபூபதியின் இசை வாழ்வு முன்னேற்றப் பாதைக்கு வர செம்பை வைத்தியநாத பாகவதரின் பங்கு முக்கியமானது. சம்பிரதாயாவில் உள்ள முருகபூபதியின் நேர்காணலில், “திருச்செந்தூரில் முதன் முறையாக செம்பைக்கு வாசித்தேன். அப்போது நான் ஃபுட்பால் ப்ளேயர். பெரிய மீசையெல்லாம் வைத்திருப்பேன். என்னைப் பார்த்ததும், “இந்தப் பையனா மிருதங்கம் வாசிக்கப் போகிறான்?”, என்று பாகவதர் நினைத்தாராம். அந்தக் கச்சேரிக்கு முன் நான் பல முறை செம்பையில் பாட்டை கேட்டிருக்கிறேன். அதன் போக்கு எப்படி இருக்கும். எப்படி வாசித்தால் அவர் மகிழ்ச்சியடைவார் என்பதையெல்லாம் நான் நன்கறிந்திருந்தேன். அப்படியே வாசித்ததும், “இவ்வளவு நாளா நீ எங்கப்பா இருந்த?”, என்று ஆச்சர்யப்பட்டுப் போனார்”, என்று கூறியுள்ளார். ஓரிடத்தில் சிறு நல்ல விஷயத்தைக் கண்டால் கூட அதை எல்லொருக்கும் தெரியும் படி பெரியதாகக் காட்டுவது செம்பையின் சுபாவம். முருகபூபதியை வாசிக்கக் கேட்டதும், சென்னையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்தார். அந்த வருடம் அகாடமி கச்சேரிகளில் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு முருகபூபதி வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் செம்பை.
இவ்விரு நிகழ்வுகளுக்குப் பின், முருகபூபதி முன்னணி வித்வான்கள் அனைவருக்கும் வாசிக்கத் தொடங்கினார். “சுமார் 30 ஆண்டு காலத்துக்கு, எந்த ஒரு பெரிய கச்சேரியிலும், மணி ஐயர், பழனி, முருகபூபதி ஆகிய மூவரில் ஒருவரே மிருதங்கம் வாசித்தனர்”, என்கிறது ஒரு ஸ்ருதி இதழ். “சங்கீத மும்மூர்த்திகள் போல, மிருதங்க மும்மூர்த்திகள் என்று இந்த மூவரையும் குறிப்பிடலாம்”, என்று வயலின் மேதை லால்குடி ஜெயராமன் கூறியுள்ளார். பழனி, முருகபூபதி இருவரும் புதுக்கோட்டை பரம்பரையில் இருந்து வந்தவர்கள்தான். அதனால், இருவரின் வாசிப்பு அணுகுமுறையிலும் பல ஒற்றுமைகள் உண்டு. ஒரே வழியில் வந்தாலும், ஒருவரைப் போல மற்றவர் வாசிக்கிறார் என்று சொல்ல முடியாத வண்ணம் பிரத்யேகமாய் தங்கள் வாசிப்பை அமைத்துக் கொண்டனர். மணி ஐயரோ, முருகபூபதியோ மிருதங்கம் வாசித்த கச்சேரிகளில்தான் பழனி கஞ்சிரா வாசிக்க சம்மதித்தார் என்பதிலிருந்து பழனியின் மனதில் மணி ஐயருக்கு நிகரான இடத்தை முருகபூபதி பெற்றிருந்தார் என்பதை உணர்திடலாம்.
முருகபூபதியின் வாசிப்பின் சிறப்பம்சங்கள் பல உண்டு எனினும், முதலில் கேட்பவரைக் கவர்வது அவர் மிருதங்க நாதம்தான். “அவர் மிருதங்கம் எப்போதுமே 100% ஸ்ருதியுடன் இணைந்து இருக்கும். எவ்வளவுதான் விவகாரமாக வாசித்த போதும், அவர் வாசிப்பில் ஒவ்வொரு சொல்லும் தேனைக் குழைத்து வாசிப்பது போல இனிமையாக இருக்கும். வறட்டு சொற்களை அவர் வாசிப்பில் கிஞ்சித்தும் காண முடியாது. குறிப்பாக, சர்வலகு கோவைகளை அவர் வாசிக்கும் போது, வலந்தலையில் உள்ள சாதத்தை தடவிக் கொடுத்தபடியே பல்வேறு நடைச் சொற்களை வாசிப்பது அவர் சிறப்பம்சமாகும்.”, என்கிறார் முருகபூபதியின் சீடர் சென்னை தியாகராஜன். ஸ்ருதியுடன் ஒருங்கிணைவதை ஓர் உபாசனையாகவே செய்த மதுரை மணி ஐயருக்கு முருகபூபதியின் வாசிப்பு வெகுவாகப் பிடித்திருந்ததில் ஆச்சர்யமில்லை. ஒரு கச்சேரியில், மதுரை மணி ஐயரின் தம்புரா பழுதாகி அவ்வப்போது ஸ்ருதியிலிருந்து விலகிய படி இருக்க, “எனக்கு தம்புராவே வெண்டாம். பூபதியாரின் மிருதங்க ஸ்ருதியே போதும்.”, என்று கச்சேரியைத் தொடர்ந்துள்ளார்.
cs_m
பழனியைப் போலவே மிருதங்கத்தின் தொப்பியை கையாள்வதில் முருகபூபதி தனக்கென்று ஓர் சிறந்த வழியை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தொப்பியில் வாசித்த முறையை, “his greatest contribution to mridangam playing”, என்கிறார் திருச்சி சங்கரன். சாதாரணமாக, மிக வேகமான சொற்கட்டுகளை வாசிக்கும் போது கும்காரங்கள் இடம் பெருவது அரிது. ஆனால், முருகபூபதியின் வாசிப்பிலே, வலந்தலையில் மின்னல்; வேக ஃபரன்கள் ஒலிக்கும் போதே, தொப்பியில் அவரது இடது கை கும்காரங்களை தன்னிச்சையாய் உதிர்ப்பதை, அவர் கச்சேரி பதிவுகளைக் கேட்கும் பொது அறிந்து கொள்ளல்லாம். பொதுவாக வலந்தலையில்தான் விரல்களை பிரித்து வாசிப்பர். தொப்பியில் வாசிக்கும் போது, பெரும்பாலான சொற்களில் விரல்கள் அனைத்தும் இணைந்தே இருக்கும். “வலந்தலையைப் போலவே தொப்பியிலும் வாசிப்பதை நான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று நினைக்கிறேன். என் சிறு வயதில் அழகநம்பி பிள்ளை தொப்பியில் வாசித்துக் கேட்டதே என்னை இவ்வாறு வாசிக்க தூண்டியது”, என்று முருகபூபதியே வானொலி நேர்காணலில் கூறியுள்ளார். “ஒரு வழைமையான சொல்லில், வலந்தலையில் இடம் பெறுவதை தொப்பியிலும், தொப்பியில் இடம் பெருவதை வலந்தலையிலும் மாற்றி வாசிப்பதும் அவர் தனிச் சிறப்பாகும்”, என்கிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். “அவர் வாசிக்கும் சொற்கட்டுகளை கேட்ட மாத்திரத்தில் புரிந்து கொண்டு விட முடியாது. அவர் விளக்கினால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்”, என்கிறார் சென்னை தியாகராஜன். “நான் கச்சேரியில் மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை வாசிப்பதைக் கேட்டு என் அண்ணாவிடம் சொல்வேன், அதை இவர் “இதைத்தான் செஞ்சு இருக்காங்க”, என்று விவரமாக விளக்குவார். அதை கிரகித்துக் கொண்டு, அப்படியே வாசிக்காமல், என் பாணியில் வாசிப்பேன். அது கேட்க புதிதாக ஒலிக்கும்”, என்று முருகபூபதியே விளக்குகிறார்.
அரியக்குடி, ஜி.என்.பி, மதுரை மணி, செம்மங்குடி போன்ற பல முன்னணி வித்வான்களுக்கு பரவலாக வாசித்து வந்த முருகபூபதி, பின்னாளில் பல திறமையான இளம் வித்வான்களை தூக்கி விடுவதிலும் முக்கிய பங்கு ஆற்றினார். “சோமு என் தம்பி மாதிரி” என்று அடிக்கடி கூறிய முருகபூபதி, பல்வேறு கச்சேரிகளில் அவருக்கு வாசித்து அவர் கச்சேரிகளை சிறப்பித்துள்ளார். பின் நாளில் மதுரை டி.என்.சேஷகோபாலன் கச்சேரிகளுக்கு நிறைய வாசித்து வலு சேர்த்துள்ளார். புல்லாங்குழல் மேதை மாலி மிகவும் விரும்பிய மிருதங்க வித்வான்களுள் முருகபூபதி முக்கியமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமது நீண்ட இசை பயணத்தில் எண்ணற்ற விருதுகளையும் கௌரவங்களையும் கண்டவர் முருகபூபதி. சிவகங்கை சமஸ்தானத்தின் ஆஸ்தான வித்வான் பட்டம் (1949), பத்மஸ்ரீ (1973), சங்கீத் நாடக் அகாடமி விருது (1975), இசைப் பேரறிஞர் (1979), அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மாநிலக் கலைஞர் (State Artiste, 1979) ஆகியவை அவருக்கு கிடைத்த ஒரு சில கௌரவங்களே. சங்கீத விருதுகளில் தலையாயதாக கருதப்படும் சங்கீத கலாநிதி விருது அவருக்குக் கிடைக்காமல் போனதை, ‘a conspicuous omission’, என்று ஸ்ருதி இதழ் குறிப்பிடுகிறது.
1940-களிலும் 50-களிலும் கோலோச்சிய பாடகர்கள் பலரது மறைவு 1960-களிலும் 70-களிலும் ஏற்பட்டது. தன்னுடன் நெருங்கிப் பழகியவர்களில் மறைவினாலும், அடுத்த தலைமுறை வித்வான்கள் தலையெடுக்கத் துவங்கியதாலும் கச்சேரி வாசிப்பை கணிசமாகக் குறைத்துக் கொண்டு தான் கற்ற கலையை அடுத்தவருக்கு அளிப்பதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். சுய மரியாதையை எந்தக் காலத்திலும் இழந்து விடாதவர் என்று பெயர் பெற்றிருந்த இவர்., சம்பிரதாயாவுக்கு அளித்துள்ள நேர்காணலில், “என்னை கௌரவமாக நடத்துபவர்கள் கச்சேரியில் மட்டுமே நான் வாசிக்கிறேன். இப்போதெல்லாம் தனியை விட்டதும் இரண்டு விரலைக் காட்டி, இரண்டு நிமஷத்துக்குள் முடித்துவிடு என்று சமிக்ஞை செய்கின்றனர். அவர்களுக்கெல்லாம் நான் வாசிக்க விரும்புவதில்லை.”, என்று தன் உள்ளத்தை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார்.
1980-களில் தமிழ் இசைச் சங்கம் நடத்திய இசைப் பள்ளியில் விசிடிங் பிரின்சிபாலாக பணியாற்றியுள்ளார். அரசு இசைக் கல்லூரியின் அலோசகர் குழுவிலும், அண்ணாமலை பல்கலைகழகத்தின் நுண்கலை பிரிவிலும் (faculty of fine arts) பணியாற்றினார். “எப்போது போனாலும் தடையின்றி சொல்லிக் கொடுப்பார். தான் ஒரு மிருதங்கத்தை வைத்துக் கொண்டு, மாணவனுக்கு ஒரு மிருதங்கத்தை அளித்து தான் சொல்லிக் கொடுப்பதை எல்லாம் மாணவன் சரிவர வாசிக்கும் வரை விடாமல் பொறுமையாகச் சொல்லிக் கொடுப்பார்”, என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜ். முருகபூபதியிடன் பயின்ற வித்வான்களுள் முக்கியமானவர் மறைந்த கஞ்சிரா மேதை ஹரிசங்கர். இவர் தவிர, மாவேலிக்கரை சங்கரன் குட்டி நாயர், காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி, மதுரை செல்லப்பா, கும்பகோணம் ப்ரேம்குமார், சென்னை தியாகராஜன் போன்ற கலைஞர்கள் இவரிடம் பயின்றவர்களே.

1998-ல் தனது 84-வது வயதில் முருகபூபதி காலமானார். அதை ஒட்டி கே.எஸ்.காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரையில், “The last of titans”, என்று இவரை குறிப்பிடுகிறார். முருகபூபதி இருக்கும் போதே சங்கரசிவ பாகவதரின் வருடாந்தர அஞ்சலி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முருகபூபதியின் மறைவுக்குப் பின் ‘சங்கர பூபதி ட்ரஸ்ட்’ என்கிற அமைப்பின் முயற்சியால் ஆண்டுதோறும் சங்கரசிவம், முருகபூபதி இருவருக்கும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகள் மூலம் அஞ்சலி செலுத்துவதோடல்லாமல் இசைத் துறையில் சாதித்தவர்களையும் கௌரவித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்க மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவதசலத்தின் முயற்சியும், முருகபூபதியின் சீடர் லட்சுமணராஜின் உழைப்புமே முக்கிய காரணங்களாகும்.
முருகபூபதியின் மறைவை சில இணையதளங்கள் தவிர எந்த ஒரு மாநில பத்திரிகையோ, தேசிய பத்திரிகையோ குறிப்பிடக் கூட இல்லை என்று ஸ்ருதியில் காளிதாஸ் எழுதிய அஞ்சலி கட்டுரை அங்கலாய்த்தாலும், அவர் வாசிப்பை கேட்ட எண்ணற்ற ரசிகர்கள் மனதில் அவர் மிருதங்க நாதம் என்றென்றும் ரீங்காரித்துக் கொண்டே இருக்கும்.

அகமுடைய முதலியார் :

கி.பி. 13-ம் நூற்றாண்டில் அகமுடைய முதலியார்கள் என்று முதலியார் என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இதே நூற்றாண்டில் முதலியார்களின் அலுவலகங்கள் குலத்தூர் , திருவண்டலூர் ஆகிய இடங்களில் பல்லவராயர் எனும் அரசரால் நிறுவப்பட்டது. தற்போது இது வட தமிழ்நாடாக உள்ளது.
ஆர்காடு , துலுவா வெள்ளாளர் முதலியார்கள் :
அகமுடையர் பிற்காலத்தில் முக்குலத்தோர் என்று அழைக்கப்பட்டனர். இந்த வகுப்பில் கல்லர் மற்றும் மறவர் என்ற உட்பிரிவுகளை உள்ளடக்கியதாகும். இந்த மூன்று சமுக இனத்தவரும் முக்குலத்தோர் என்று கடைசியாக அழைக்கப்பட்டனர். அகமுடையார்கள் பின்னர் வட தமிழ்நாடு முழுவதும் பரவினர். இவர்கள் தங்களது பிரிவை துலுவ வெள்ளாலர் என்று மாற்றி அமைத்துக்கொண்டனர். எனவே துலுவ வெள்ளாலர்கள் என்பவர்கள் பொதுவாக தங்களது சமுகத்தின் பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். இவர்கள் இதனை அரசு முலம் பதிவு செய்து நடைமுறையில் கொண்டு வந்துள்ளனர். இவ்வாறான கலப்பு இனங்கள் இரண்டு சமுகன்ங்களுக்கு இடையில் பல மாறுதல்களுடன் உருமாறியுள்ளது இதற்கு எந்த விதமான வரலாற்று குறிப்புகள் மற்றும் ஆதாரங்களும் இல்லை. எனவே அகமுடையார்கள் தங்களது சமுகத்தை துலுவ வெள்ளாலர்கள் என்று மாற்றிக்கொண்டனர். முற்காலத்தில் அதாவது 13-வது நூற்றாண்டில் அகமுடையார்கள் முதலியார்கள் என்றே அழைக்கப்பட்டனர் இவ்வாறான தகவல்கள் 23 மற்றும் 25 ஆம் நூற்றாண்டில் திருவலூந்தூர் நாட்டில் உள்ள ராஜ ராஜ ஜஸ்வரய படையார் திருக்கோவில் கல்வெட்டில் சோழக்கன் பல்லவராயர் அவர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
துலுவ வெள்ளாலர், துலுவ அல்லது துலுமர் என்ற உட்பிரிவுகளாக தெற்கு கண்ணட நாட்டில் துலு நாடு எனும் நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இன்று தொண்டை மண்டலத்தில் வாழும் துலுவ வெள்ளாலர் சமுகத்தினர் ஆதொண்டை சக்கரவர்தியால் உருவாக்கப்பட்டனர். குரும்பர்களை வென்ற பின்னர் வடதமிழ்னாட்டில் இவர்களது ஆட்சி பரவியது . இவர் தனது கொள்களை வட வடதமிழ்னாட்டில் பரப்பியுள்ளார் . குரும்பர்களை வென்ற பின்னரே வடதமிழ்னாட்டில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்டது. இந்த குறிப்பு ஸ்ரீசைலம் எனும் ஊரில் ஆதொண்டை சக்கரவர்த்தியால் கல்வெட்டில் பதியப்பட்டுள்ளது.

Saturday 12 November 2011

ரூ. 2 கோடி செலவில் திருமண மண்டபம்: அடிக்கல் நாட்டி பூமி பூஜை

ராமநாதபுரம், அக். 28: ராமநாதபுரம் அருகே சாத்தான்குளம் கிராம பஸ் நிறுத்தத்தில் ரூ. 2 கோடி மதிப்பில், அகமுடையார் சங்கம் சார்பில் மருதுபாண்டியர்கள் பெயரில் திருமணம்  மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா மற்றும் பூமிபூஜை வெள்ளிக்கிழமை  நடைபெற்றது.

 விழாவுக்கு, மாமன்னர் மருதுபாண்டியர் அறக்கட்டளையின் தலைவர் எம். வீராச்சாமி தலைமை வகித்தார்.

 அகமுடையார் சங்க மாவட்டச் செயலர் எம். வேல்முருகன், மாவட்டப் பொருளாளர் ஆர். ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார் வரவேற்றார்.

 சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாம்பன் என். ராஜாஜி மருதுபாண்டியர் படத்தை  திறந்துவைத்து, அடிக்கல் நாட்டி, பூமி பூஜைகளைச் செய்தார்.

 பின்னர், அறக்கட்டளைத் தலைவர் எம்.வீராச்சாமி தெரிவிக்கையில், ரூ. 2 கோடி  செலவில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் இம்மண்டபம் விரைவில் கட்டி முடிக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார்.

 விழாவில் பட்டணம்காத்தான் ஊராட்சிமன்றத் தலைவர் சித்ராமருது, முன்னாள்  ஊராட்சிமன்றத் தலைவர் குப்புராம்ஜி,சங்க நகர் தலைவர் குருசாமி,டி.கே. ஜூவல்லர்ஸ் உரிமையாளர் டி.கிருஷ்ணசாமி, பாம்பன்,எஸ். பாலா,வி,கே. ரமேஷ்,  பாம்பன் எஸ். பாலா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மருதுபாண்டியர் குருபூஜை விழா: தலைவர்கள் அஞ்சலி

மானாமதுரை, அக். 27: சிவகங்கை மாவட்டம், காளையார்கோயிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற குருபூஜை விழாவில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 புதியபார்வை ஆசிரியர் நடராஜன் மருதுபாண்டியர் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதுரை ஆதீனம், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ஸ்ரீதர் வாண்டையார், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் டாக்டர் என். சேதுராமன், முன்னாள் அமைச்சர்கள் பொன் முத்துராமலிங்கம், சுப.தங்கவேலன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள், அரசியல் கட்சியினர் மருது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.
 பல்வேறு இடங்களிலிருந்து அகமுடையார் சமூகத்தினர் வேன், கார்களில் காளையார்கோயிலுக்கு வந்து மருதுபாண்டியர் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மருதுபாண்டியர் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் பணியில் போலீஸ் ஈடுபட்டிருந்தனர்.

மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் அஞ்சலி

ராமநாதபுரம், அக். 24: ராமநாதபுரம் அருகேயுள்ள வாலாந்தரவை கிராமத்திலிருக்கும் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து அகமுடையார் சங்க நிர்வாகிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
 ராமநாதபுரம் மாவட்ட அகமுடையார் சங்கத் தலைவர் பாம்பன் என்.ராஜாஜி தலைமையில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.ஆர்.எஸ். அய்யனார், மருதுபாண்டியர் அறக்கட்டளை தலைவர் வீராச்சாமி, வாலாந்தரவை கிராமத் தலைவர் விஸ்வநாதன், தர்மா ஆகியோர் மருதுபாண்டியர்கள் 210வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
 பின்னர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாம்பன் என்.ராஜாஜி கூறியதாவது:
 மருது சகோதரர்கள் நினைவு தின விழா, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு
 விழாவாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை நினைவுகூரும் வகையில் மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தோம்.
 இம்மாதம் 27 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் ராமநாதபுரத்தை சுற்றியுள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட வேன்களில் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறோம். மறுநாள் 28 ஆம் தேதி மருதுபாண்டியர்
 திருமண மண்டப அடிக்கல் நாட்டு விழாவும் ராமநாதபுரத்தில் நடைபெற இருக்கிறது என்றார்.
 அப்போது அகமுடையார் சங்க மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

பரமக்குடியில் மருதுபாண்டியர் குருபூஜை

பரமக்குடி, அக். 27: மாமன்னர் மருதுபாண்டியர்களின் 210-வது குருபூஜை விழா பரமக்குடி நகர் மற்றும் சுற்றுப்புறக் கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 குருபூஜை விழாவை முன்னிட்டு சந்தைக்கடைத் தெருவில் எஸ்.ராமமூர்த்தி தலைமையிலும், காமராஜர் நகர், திருவள்ளுவர் நகர், மருதுபாண்டியர் நகர் ஆகிய பகுதிகளில் சுபாஷ் சந்திரபோஸ், தடா கண்ணுச்சாமி ஆகியோர் தலைமையிலும் மருதுபாண்டியர் உருவம் பொறித்த அகமுடையர் நலச் சங்கக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.
 பின்பு, மருதுபாண்டியர்களின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பரமக்குடி நகர் மற்றும் மருதுபாண்டியர் நகர், திருவள்ளுவர் நகர், மலையான் குடியிருப்பு, பர்மா காலனி, தெளிச்சாத்தநல்லூர், பாண்டிக் கண்மாய், எமனேஸ்வரம், அக்கரமேசி, இலந்தைக்குளம், கமுதக்குடி, வாகைக்குளம், கொழுவூர் உள்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் காளையார்கோவிலில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
 முன்னதாக, போலீஸôரின் தடை உத்தரவால், மருதுபாண்டியர்களின் குருபூஜைக்கு வழக்கமாக வைக்கப்படும் டிஜிட்டல் போர்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நகர் மற்றும் கிராமங்களில் பதற்றம் நிலவியது. இதனைத் தொடர்ந்து போலீஸôரின் பலத்த பாதுகாப்புடன் அஞ்சலி செலுத்துவோரின் வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன.