Tuesday 30 August 2011

திருக்குன்றக்குடி 1

பாகம் 1
கடாரத் தமிழ்ப் பேரறிஞர்

டாக்டர் எஸ்.ஜெயபாரதி


குன்றக்குடி

                    குன்றக்குடி என்னும் ஊர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள முருகன்   ஸ்தலங்களில் ஒன்று. திருப்புத்தூரிலிருந்து காரைக்குடி செல்லும் சாலையின்மீது அது இருக்கிறது. மதுரையிலிருந்து 80 கீலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இதன் மிக அருகில் - சுமார் ஐந்து கீலோமீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி இருக்கிறது. இந்த வட்டாரத்தில் மிகப்புராதனமான கோயில்களும் ஊர்களும் உண்டு.
                    குன்றக்குடி என்னும் பெயரால் விளங்கும் ஒரு சிறு குன்றின் அடிவாரத்தில் அமைந்த ஊர் குன்றக்குடி. குன்றக்குடி குன்றுக்கு 'மயில் மலை' என்றும் 'மயூரகிரி', 'சிகண்டிமலை'  என்றும் பெயர்கள் உண்டு.  சிகண்டி என்பது மயிலையும் குறிக்கும்.
                    அந்தக் குன்றின் உச்சியில் கோட்டை போன்ற அமைப்புடன் பாதுகாப்பாக விளங்குவது குன்றக்குடி ஸ்ரீஷண்முகநாதன் ஆலயம். வள்ளி தேவசேனா சமேதரராக ஆறுதிருமாமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் பெற்று விளங்கும் திருக்கோலத்தில் இறைவன் தம் திருத்தேவியர்களுடன் எழுந்தருளியிருக்கின்றனர்.
                    'தேனாறு' என்னும் ஆற்றால் வளம்பெற்ற புராதனமான ஊர்.

                    குன்றக்குடி மிகவும் தொன்மையானதோர் ஊர்.

                    பழங்காலத்தில் அது 'தேனாற்றுப் போக்கு திருகுன்றக்குடி' என்ற பெயர் பெற்றிருந்தது. குன்றக்குடி குன்றின் அடிவாரத்தில் ஒரு குடைவரைக் கோயில் இருக்கிறது.
                    அந்த மலையின்மீது சமணர்களின் கற்படுக்கைகள் இருக்கின்றன. பிராம்மி எழுத்துக்களால் ஆன கல்வெட்டும் உண்டு. இவை சங்க காலத்தைச் சேர்ந்தவை.
                    குன்றின் அடிவாரத்தில் உள்ள குடைவரைக் கோயிலை தேனாற்றீசர் அல்லது தேனாற்றீஸ்வரர் கோயில் என்று அழைப்பார்கள். இதில் சில அழகிய சிற்பங்கள் உண்டு. இந்தக் கோயில் ஆயிரத்தெழுநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட கோயில். அதற்கும் முன்பே இங்கு சிவன் கோயில் இருந்திருக்கலாம்.

                    தேனாற்றீஸ்வரமுடைய நாயனார் என்று அக்கோயிலின் குடிகொண்டுள்ள சிவபெருமான் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறார். இப்போது அது நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான கோயிலாக இருக்கிறது. அங்குதான் ஒரு மிகக் கசப்பான அனுபவம் எனக்கு ஏற்பட்டது. ஜாதி வித்தியாசம் ஏற்றத்தாழ்வுகள் இல்லையென்று சொல்கிறார்கள். சொல்லளவில்மட்டும்தான். உண்மை நிலை?

                    'திருக்குன்றக்குடி' என்னும்போது அது பாடல்பெற்ற ஸ்தலமாகத்தான் இருக்கவேண்டும். பிற்காலத்தில் அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
                    ஆனால் அதற்கும் முற்காலத்தில் அது ஏதாவது தேவாரம் பெற்ற ஸ்தலமாக இருந்திருக்கக்கூடும். 'திரு' என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

                    பாண்டிய நாடு முழுமைக்கும் பதினான்கே பதினான்கு பாடல் பெற்ற தலங்கள்மட்டும்தான் இருக்கின்றன என்பது சற்று யோசிக்கவேண்டிய விஷயம்.
                    தில்லையில் கூத்தனாக விளங்கும் தென்பாண்டிநாட்டான் அவ்வாறு விட்டிருப்பானா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

                    பதினாறாயிரம், நாற்பதாயிரம் என்று பாடப்பட்ட தேவாரப் பாடல்களில் வெறும் மூவாயிரம், ஆயிரம் பாடல்கள் மட்டுமே எஞ்சின; மற்றவை அழிந்துவிட்டன என்று சொல்லப்பட்டிருப்பதையும் கருத்தில் வலுவாக இருத்திக் கொள்ளவேண்டும்.
                    பல ஸ்தலங்கள் பாடப்பட்டு அவற்றிற்குரிய பாடல்கள் மறைந்திருக்கலாம்.
                    நியமம் என்னும் நாட்டுப்பிரிவில் திருக்குன்றக்குடி இருந்தது. பழங்காலத்தில் ஒரு நாட்டை மண்டலம், வளநாடு, நாடு, ஊர், நகரம், பட்டினம், கிராமம் என்று பிரிவுகளாகவும் உட்பிரிவுகளாகவும் பிரித்திருந்தார்கள். நிர்வாகம், பாதுகாப்பு, வரிவிதிப்பு, நில அளவை போன்ற காரியங்களுக்காக அவ்வாறு பிரிக்கப்பட்டிருந்தன.
                    குன்றக்குடி பாண்டிமண்டலத்திலுள்ள கேரளசிங்கவளநாட்டின் உட்பிரிவாகிய கான நாட்டிலுள்ள தேனாற்றுப்போக்கு-நியமம் நாட்டில் இருந்தது. நியமத்தை காங்கேயன் என்னும் சிற்றரசர் பரம்பரை ஆண்டுவந்தது. கங்கை நதிக்கரையிலிருந்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டுக்கு வந்த காராளர் குடியைச் சேர்ந்தவர்கள் அந்த பரம்பரையினர்.
                    கேரளசிங்க வளநாடு, கான நாடு, கோனாடு முதலியவை அனைத்தும் இப்போது செட்டிநாடு என்று அழைக்கப்படும் பிரதேசத்தில் இருக்கின்றன. சிவகங்கைச் சீமை, புதுக்கோட்டைச் சீமை ஆகியவற்றில் செட்டிநாடு விளங்குகிறது. குன்றக்குடி சிவகங்கைச் சீமையைச் சேர்ந்ததுதான்.
                    நாட்டுப் பிரிவுகளும் அவற்றின் பெயர்களும் எல்லைகளும் பரப்பளவுகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன.
                    மிகவும் வளமுடன் இருந்துவந்த குன்றக்குடி இருநூற்றைம்பது  ஆண்டுகளுக்கு முன்னர் க்ஷ£ணித்த நிலையை அடைந்தது.
   
                    அதன் பின்னர் மருது சேர்வைக்காரர்களால் அது மிகவும் பசுமையும் வளமும் கொண்ட இடமாக மாறியது.
                    அதற்கு ஓர் உண்மையான வரலாற்றுக் கதையைச் சொல்ல வேண்டும்.

                    சொல்கிறேன்........

1 comment: