Tuesday 21 June 2011

மருது பாண்டியர்களின் வீரவரலாறு 7

திண்டுக்கல் - விருப்பாச்சி பாளையம்
சிவகங்கை அரசர் முத்துவடுகநாதர் இறந்த செய்தி கேட்டு தாண்டவராய பிள்ளை மெய் கலங்கிப் போனார். மன்னர் முத்துவடுகநாதர் போரில் இறந்த செய்தியை மருது சகோதரர்கள் கொல்லங்குடியில் தங்கியிருந்த ராணி வேலுநாச்சியாரிடம் சென்று தெரிவித்தனர். தனது கணவர் இறந்த பிறகு ராணி  வேலுநாச்சியார் உடன் கட்டையேறி தனது உயிரைப் போக்கிக் கொள்ள முயன்றார். பிரதானி தாண்டவராய பிள்ளை மற்றும் பெரிய மருது, சின்ன மருது முதலியோர் வேலுநாச்சியாரை சமாதானம் செய்து இழந்த சீமையை எவ்வகையிலும் எங்கள் உயிரைக் கொடுத்தாவது மீட்டுத் தருவதாக அவருக்கு வாக்குறுதி வழங்கினர்.தாண்டவராய பிள்ளையின் ஆலோசனைப்படி மைசூர் மன்னர் ஹைதர் அலியின் ஆளுகைக்குட்பட்ட திண்டுக்கல்லுக்கருகிலுள்ள விருப்பாச்சி கோட்டையில் ராணி வேலுநாச்சியார் தங்குவது என முடிவெடுக்கப்பட்டது. மருது சகோதரர்கள் வேலுநாச்சியாரையும் அவரது மகள் வெ ள்ளாச்சி நாச்சியாரையும் பல்லக்கில் மேலூர் வழியாக திண்டுக்கல் அழைத்துச் சென்று அங்கிருந்து பின்னர் விருப்பாச்சி பாளையத்துக்கு போய் சேர்ந்தனர்.
விருப்பாச்சி என்ற சிற்றூர் திண்டுக்கல் கோட்டைக்கு வடகிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. வீரமும், மான உணர்வும் கொண்ட கம்பளத்து நாயக்கர்களைக் குடிமக்களாகக் கொண்ட புரட்சி பூமிதான் விருப்பாச்சிபாளையம. திண்டுக்கல் சீமையின் மிக முக்கியமான இருபது பாளையங்களில் ஒன்றாகும் இவ்வூர். இக்குடிமக்கள் வாழும் விருப்பாச்சிப் பாளையத்தை அவர்களது தலைவரான கோபால நாயக்கர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஒரு சிறந்த விடுதலை வீரர். விடுதலை இயக்கத்தின் மாபெரும் ராஜதந்திரி என்றும் அவர் அன்னாளில் கருதப்பட்டார். ஆங்கிலக் கம்பெனி படைகளை எதிர்த்துப் பல்வேறு போர்களில் கோபால நாயக்கர் பங்கு கொண்டார்.மன்னர் முத்துவடுகநாதர் காளையார் கோயில் போரில் வீரமரணமடைந்ததைக் கேள்விப்பட்ட கோபால நாயக்கர், ராணி வேலு நாச்சியார், அவரது மகள் வெ ள்ளாச்சி நாச்சியார் மீது பரிவும், பாசமும் கொண்டிருந்தார். மந்திரி தாண்டவராய பிள்ளையின் நெருங்கிய நண்பரான அவர், வேலுநாச்சியார், அவர் மகள், மருது சகோதரர்கள், பிரதானி தாண்டவராய பிள்ளை ஆகிய அனைவரும் தங்குவதற்குத் தக்க வசதிகளையும் தகுந்த பாதுகாப்பும் செய்து கொடுத்தார்.
இந்த காலக்கட்டத்தில் வேலுநாச்சியாருக்கு ஆதரவாகச் சிவகங்கை சீமையிலுள்ள பல்வேறு சீமைகளுக்குச் சென்று அங்கு நடந்த விபரங்களைப் பொது மக்களுக்கு எடுத்துக்கூறி பொதுமக்களை நவாப்பிற்கு எதிராகப் புரட்சி செய்யுமாறு கேட்டு ஒன்று திரட்டினர். பின்னர் அவர்கள் விருப்பாச்சிப் பாளையத்துக்கு வந்து சேர்ந்தனர். விருப்பாச்சியில் வேலுநாச்சியார் தங்கியிருந்த பொழுது திண்டுக்கல் கோட்டைத் தளபதியாக ஹைதர் அலியின் மைத்துனர் சையத் சாகிப் என்பவர் பொறுப்பு வகித்தார். ராணி வேலுநாச்சியாரையும், தாண்டவராய பிள்ளையையும், மருது சகோதரர்களையும், கோபால நாயக்கர் சையத் சாகிப்பிற்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மேலும் மறவர் சீமைகளிலிருந்து ஆற்காடு நவாபை விரட்டி அடிக்க ராணியும் பிரதானியும், மருது சகோதரர்களும் மைசூர் மன்னர் ஹைதர் அலியிடம் உதவி கேட்டு வந்திருப்பதாக கோபால நாயக்கர் அவர்களிடம் சொன்னார். அக்கோரிக்கையை ஏற்று மைசூர் சுல்தான் ஹைதர் அலிக்குப் பரிந்துரை செய்து அனுப்பி வைக்குமாறு கோபால நாயக்கருக்கு உறுதி செய்துகொடுத்தார். எப்டியும் ராணிக்கு உதவி செய்ய வேண்டுமென்று மனதார சையத் சாகிப் விரும்பினார். சிகங்கைப் பிரதானி தாண்டவராய பிள்ளை ராணி வேலுநாச்சியார் சார்பாக ஹைதர் அலி அவர்களுக்கு 8-12-1772 தேதியிட்டு ஒரு நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார்.
ஆற்காடு நவாப் இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு தன்னரசுகளையும் ஆக்கிரமித்து அழிவை ஏற்படுத்தி வருகிறார். நான் கள்ளர் தலைவர்களுடன் காடுகளில் தங்கி கிளர்ச்சியைத் தொடர்ந்து வருகிறேன். எனக்கு யார் உதவி செய்தாலும் இன்னும் சிறந்த சாதனைகளை செய்ய முடியும். ஆகையால் தாங்கள் ஐயாயிரம் குதிரை வீரர்களையும்,  ஐயாயிரம் போர் வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களது படிச் செலவை நான் ஏற்றுக்கொண்டு அவர்களுடன் இணைந்து இந்த இரு சமஸ்தானங்களையும் மீண்டும் கைப்பற்ற இயலும். தங்களுக்கு செலுத்த வேண்டிய 'நஜர்” (செலவு தொகை) பின்னர் முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்று கடிதம் எழுதினார். மேலும் பிரதானி, சிவகங்கைச் சீமை நாட்டார்களுக்கும் தூதுவர்கள் மூலம் செய்தி அனுப்பி, அவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். சிவகங்கைச் சீமையை விடுவிப்பதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். பிள்ளையின் கனவை நினைவாக்க மருது சகோதரர்கள் அல்லும் பகலும் உறங்காமல் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
சிவகங்கைச் சீமையை மீட்பதற்குப் பிரதானி தாண்டவராயபிள்ளை மறைமுகமாக மருதுபாண்டியர்கள் உடன் சேர்ந்து செயல்படுகின்றார் என்பதை நவாப்பும், கம்பெனியாரும் அறிந்து கொண்டனர். நவாப்பின் மகன் உம்தத்-உல்-உமராவிற்கு இச்செய்தி கிடைத்தவுடன் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டார். பிரதானியின் முயற்சியை முறியடிப்பதில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டார். இந்நேரத்தில் பிரதானி தாண்டவராய பிள்ளை அவர்களுக்கு முதுமையின் காரணமாகவும், மனதில் அமைதி இல்லாததினால் உடல் சோர்வடைந்து நோய்வாய்ப்பட்டு 1773ம் ஆண்டு நடுவில் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார்.
தாண்டவராய பிள்ளையின் கனவை நனவாக்க வேண்டுமென்று மருது சகோதரர்கள், பிள்ளையவர்கள் விட்டுச் சென்ற பெரும்பணியைத் திறம்படத் திட்டமிட்டுச் செயல்படுத்தினர். அதில் வெற்றி பெற வேண்டுமென்று அவர்கள் தீவிரமாக உழைத்தனர். மருது பாண்டியர்கள் ராணி வேலுநாச்சியாருக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண்டு அல்ல இரு ஆண்டுகள் அல்ல எட்டு ஆண்டுகள் விருப்பாச்சியில் அவர்களுடன் தங்கியிருந்து அவர்கள் பணிவிடை செய்தனர். அவரின் கணவர் தங்களை ஒரு வேலைக்காரர் என்று பார்க்காமல் தங்களுக்கு உரிய மரியாதை செய்து சிவகங்கைச் சீமைக்கு ஒரு படைத்தளபதியாக வேலையில் உயர்வு கொடுத்து உதவிய மன்னரின் நினைவாக ராணியையும், அவரின் மகளையும் கண்ணின் இமை போல் பாதுகாத்து வைத்தனர்.
உல்கத்தின் ஒரே எதிரி தனக்கு ஆங்கிலேக் கம்பெனிப் படை என ஆர்ப்பரிப்பவர் ஹைதர் அலி. எனவே ஆங்கிலேயர்களை எதிர்க்கும் ராணி வேலுநாச்சியாருக்குப் படை கொடுத்து உதவி செய்ய ஹைதர் அலி விரும்பினார். வேலுநாச்சியார் மருது சகோதரர்;கள் விருப்பாச்சியில் இருந்தாலும் அவாகளது உள்ளம் சிவகங்கைச் சீமை மக்களிடத்திலேயே இருந்தது. இதற்கிடையில் மருது சகோதரர்கள் அங்குள்ள நாட்டு மக்களை அவ்வப்பொழுது சந்தித்து நாடு விடுதலை பெற மறைமுகமாக பல அரசுக்கு எதிரான செயல்களை செய்து கொண்டு இருந்தார். சிவகங்கைச் சீமை மக்கள் பொன்னையும், பொருளையும் அவர்களுக்கு ரகசியமாக அனுப்பி வைத்து அடிக்கடி ராணுவ ரகசியச் செய்திகளையும் சிவகங்கையில் இருந்து விருப்பாச்சிக்கு அனுப்பி வைத்தனர். சிவகங்கை குடிமக்களின் புரட்சியும், கிளர்ச்சியும், கலகமும் நவாப்புக்கு எதிராக சிற்சில சமயங்களில் வெடித்தன.
நவாப்பின் கட்டுப்பாடிலிருந்த பகுதிகளிலிருந்த கோட்டைகளையும், பேட்டைகளையும் தங்களிடமிருந்த வில், வேல், வாள், நாட்டுத் துப்பாக்கிகள் கொண்டு தாக்கினர். ஆற்காடு நவாப்பின் தண்டல்காரர்கள் சிவகங்கைச் சீமையில் குத்தகைக்கு விடப்பட்ட பகுதிகளில் வரி வசூலிக்க வந்தால், அவர்களால் திரும்பிச் செல்வது மிகக் கஷ்டமாக இருந்தது. தண்டல்காரர்கள் சிறு தொகையைக்கூட வரி வசூலிக்க முடியவில்லை. சிவகங்கை மக்கள் சில சமங்களில் தண்டல்காரர்களிடம் கத்தியைக் காட்டி வரி கொடுக்க முடியாது எனக் கூறி விரட்டி அடித்தனர்.ராணி வேலு நாச்சியார் எட்டு ஆண்டுகள் சுல்தான் ஹைதர் அலி அவர் இறந்த பிறகு அவர் மகன் திப்பு சுல்தானின் பாதுகாப்பில் விருப்பாச்சியில் தங்கியிருந்தார். அவருக்குப் பக்கபலமாகத் துணையாக பெரியமருதுவும், சின்னமருதுவும் உடனிருந்தனர். ஒரு நாள் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் வேலுநாச்சியாருக்கு ஒரு செய்தி அனுப்பினார்.  திண்டுக்கல் கோட்டை வந்து குதிரைப் படைகளைப் பெற்றுச் செல்லுமாறு அதில் குறிப்பிட்டிருந்தார். உடனே வேலு நாச்சியார் அப்படைகளை போய் பெற்றுக் கொண்டார். ராணி வேலுநாச்சியார் தலைமையில் மருது சகோதரர்கள் வழிகாட்டுதலில் சின்ன மறவர் சீமை சிவகங்கை நோக்கிச் சீறிப் பாயந்தன. அப்படைகளுக்கு ராணி தலைமையேற்றார். நவாபின் படைகளும், கம்பெனிப் படைகளும், மதுரைக்கருகில் கோச்சடை என்னுமிடத்தில் தடைகளை அமைத்து வேலுநாச்சியார் தலைமையில் வந்த படைகளைத் தாக்கின. வேலுநாச்சியார் தலைமையில், மருதுபாண்டியர் போர்த்திறனில் வழிகாட்டுதலில் வந்த படை, அப்படைகளைப் பாய்ந்து தாக்கித் தவிடுபொடியாக்கின. மானாமதுரைப் பகுதியில் வேலுநாச்சியார் படைகளுக்கும் கம்பெனி படைகளுக்கும் நடந்த போரில் அவை ஓடி ஒளியுமளவிற்குப் போர் புரிந்து ராணி வேலுநாச்சியார் வெற்றி பெற்றார்.
பின்னர் ராணியார் தனது படைகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு அவர் தலைமை தாங்கினார். திருப்பத்தூர் படை பிரிவிற்கு நள்ளியம்பலம் என்பவரை நியமித்தார். காளையார் கோயில் பிரிவிற்கு மருது சகாதரர்களை நியமித்தார். இந்த முப்படைப் பிரிவுகளும் நவாப்பின் படைகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்டன. இப்படைகள் நவாப்பின் படைகளோடு மோதி மும்முனைத் தாக்குதல் நடத்தி வெற்றிகண்டன. நிலைமையின் கனத்தை உணர்ந்த ஆங்கிலேயரும் ஆற்காட்டு நவாப்பும் மறுபரிசீலனை செய்தார்கள். வேலுநாச்சியாரும், மருது பாண்டியர்களும் தங்களின் பொது எதிரியான ஹைதர் அலியுடன் உறவாடுவதை எப்படியும் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என உறுதி பூண்டார்கள். ஆற்காட்டு நாவபும், ஆங்கிலேயர்களும் கூடிக்கூடிப் பேசினார்கள். கடைசியாக ஒரு முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளாகத் தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த சிவகங்கைச் சீமையை மற்றும் இராமநாதபுரம் சீமைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்தார்கள். சிவகங்கைப் பாளையத்துக்குக் கிடைத்த வெற்றி இராமநாதபுரத்துக்கும் கிடைத்தது. மாப்பிள்ளைத் தேவர் என்பவர் ஹைதர் அலியின் படை உதவியைப் பெற்று இராமநாதபுரத்தில் களிர்ச்சி செய்தார். நவாப்பின் இந்த அறிவிப்பு அவர்களுக்கும் மகிழ்ச்சியை தந்தது. அதன்படி மாப்பிள்ளை தேவரிடம் பெரிய மறவர் சீமை வந்தது.
இச்செய்தி கேட்டு ராணியாரும், மருதுபாண்டியரும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மக்கள் ஆரவாரத்துடன் வேலுநாச்சியார் தாயகம் வந்து சேர்ந்தார். சிவகங்கைச் சீமையில் கால் வைத்ததும் அவர்களது உள்ளம் மலர்ந்தது, உணர்வுகள் ஒருநிலைப்பட்டன. மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியாக ஆனந்தக் கூத்தாடினார்கள். 1780ஆம் ஆண்டில் அமைதியும் நிம்மதியும் மறுபடியும் சிவகங்கைச் சீமைக்குள் திரும்பி வந்தன. வேலு நாச்சியார், மருதுபாண்டியர்களின் உருவத்தில். வேலுநாச்சியார் தனது நாட்டின் எதிர்காலத்தைக் குறித்து மிகவும் ஆழமாகச் சிந்தனை செய்தார். தனது கணவர் முத்துவடுகநாதர் இறந்த பிறகு அரசியார் அரசுப் பதவியில் அவரது நாட்டம் குறைந்தது. நாட்டின் நலனையே முக்கியக் குறிக்கோளாகக் கண்டார்.
சிவகங்கைச் சீமையின் அமைச்சர்களாகவும் படைத் தலைவர்களாகவும் இருந்து நாட்டைப் பராமரிக்கும்படி ராணியார் மருது சகோதரர்களுக்கு அன்புக் கட்டளை இட்டார். அதை சிரமேற்கொண்டு அப்பதவிகளை மருது சகோதரர்கள் ஏற்றுக்கொண்டனர். அதன்படி நாட்டைப் பராமரித்து வந்தனர். தமது இரண்டு கண்களாக நாட்டு மக்களின் நலன்களை பாதுகாத்து வைத்தனர்.மருதுபாண்டியர்களின் ஆட்சி காலம் 1780ஆம் ஆண்டு முதல் 1801ஆம் ஆண்டு வரை எனலாம். சிலருக்கு அவர்கள் மன்னரா? அல்லது மந்திரியா? எனக் கேள்வி எழலாம். நாம் இந்தக் கேள்விக்குள் போக வேண்டாம். அவர்களது ஆட்சியின் சிறப்பு. அவர்களின் திருப்பணிகள் சிவகங்கைச் சீமையை ஆங்கில ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட நாட்டில் உள்ள பெருவாரியான மக்கள் செல்வாக்கை எப்படி கூட்டினார்கள். இவர்களின் கூட்டமைப்பில் யார், யார் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, யாருக்கும் கிடைக்காதது அந்நாளில் முதல் விடுதலை போருக்கு வித்திட்டவர்கள் என ஏன் சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்?மருது பாண்டியரின் ஆட்சி சிவகங்கைச் சீமையின் ஆட்சியும் அதிகாரமும் மருதுபாண்டியர்களுக்கு வந்ததும் அவர்களுக்குச் சந்தோஷமும் சங்கடமும் மனதில் எழத் தொடங்கின. சிவகங்கைச் சீமையின் மக்களும் மருதுபாண்டியர்களை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டில் முழுவதுமாக அமைதி நிலவியது. இருந்தாலும் மருது சகோதரர்களின் உள்ளங்களில் கவலை குடிகொண்டிருந்தது. நவாபிற்கும் ஆங்கிலேயர்களுக்கும் கட்ட வேண்டிய பணத்தைத் திரட்டி உடனடியாகக் கட்டுவதற்கு என்ன வழிகள் உண்டு என மருது பாண்டியர்கள் ஆலோசனையில் ஈடுபட்டார்கள.
உள்நாட்டில் பணத்தைக் திரட்ட முயன்ற போது பல செல்வந்தர்கள் பணம் கொடுக்க மறுத்தார்கள். அதுமட்டுமா! நவாபின் பிடியில் ஆங்கிலயர்களின் கைகளில் மாட்டிக் கொண்டிருக்கும் இந்த மருதுபாண்டியர் சிவகங்கைச் சீமையின் அரசர்களா? என்று கேலி செய்தார்கள். கட்டாயம் பணம் சேர்த்தாக வேண்டிய நிலையில் இருந்த மருது சகோதரர்கள் திருவிதாங்கூர் சென்றார்கள். அந்த நாட்டின் மன்னரிடம் அனுமதி பெற்று கொடிய புலி ஒன்றை 'கைவளரி' என்ற சிறிய ஆயுதத்தை மட்டுமே பயன்படுத்திக் கொன்று அந்த மன்னனிடம் மதிப்பைப் பெற்றார்கள்.
சின்னமருது 'வளரிஎறிந்து காட்டி திருவிதாங்கூர் மன்னனைத் திகைக்க வைத்தார். மருது சகோதரர்கள் இன்னும் பல சாதனைகளை செய்துகாட்டி திருவிதாங்கூர் மன்னரின் நிறைந்த அன்பைப் பெற்றார்கள். திருவிதாங்கூர் (இன்றைய கேரளா) மன்னர் மருது சகோதரர்களுக்குப் பெரும் பணத்தைக் கடனாகவும், கொஞ்சம் பணத்தைப் பரிசாகவும் கொடுத்தார். மருதுபாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நல்ல ஆட்சி நடந்தது. நிறைவான நீதி வழங்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நவாப்பின் நேரடியான குத்தகையாளர்களால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த சிவகங்கைச் சீமையைப் பழைய நல்ல நிலைக்குக் கொண்டுவர, விடாது பாடுபட்டார்கள் மருது பாண்டியர்கள்.

No comments:

Post a Comment